`மக்களின் போராட்டக்குரல் முதல்வருக்குக் கேட்கவில்லையா?' - ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் இரண்டு கல்லூரிகளின் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு 4வது நாளாக மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் ஆலையின் அருகிலுள்ள குமரெட்டியாபுரம் கிராம மக்கள் இன்று 50வது நாளாகக் கிராமத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தக்  கிராம மக்களுக்கு ஆதரவாகவும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் ஏற்கெனவே, 3 நாள்கள் தொடர்ந்து கல்லூரி மாணவர்களும் அரசு தொழிற்பயிற்சி மைய மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று மீண்டும், 4 வது நாளாகத் தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரம் கல்லூரி மற்றும் காமராஜ் கல்லூரி மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர், கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குமரெட்டியாபுரம் கிராம மக்களைத் தொடர்ந்து இதன் அருகில் உள்ள பண்டாரம்பட்டி கிராம மக்களும் ஊருக்குப் பொதுவான இடத்தில் மரத்தடியில் அமர்ந்து நேற்று முதல் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். 

மாணவர்கள் போராட்டம்

இது குறித்து மாணவர்களிடம் பேசினோம், “கடந்த 50 நாள்களாகக் குமரெட்டியாபுரம் கிராம மக்கள் ஆட்கொல்லி ஆலையான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, தளராமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல கட்சித் தலைவர்களும் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கிராமத்துக்கு நேரில் வந்து மக்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

லண்டனிலும் அமெரிக்காவிலும் வாழும் தமிழர்கள்கூட ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தியும் போராட்டம் நடத்தினார்கள். ஆனால், இன்று வரை அரசு அதிகாரிகளோ ஆட்சியரோ, தொகுதி எம்.எல்.ஏ-வோ அமைச்சரோ என யாரும் வரவில்லை. மக்கள், மாணவர்களின் போராட்டக்குரல்கள் வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு கேட்டு லண்டனில் ஸ்டெர்லைட் ஆலையின் இயக்குநர் அனில் அகர்வால் வீட்டு முன்பே போராட்டத்தில் ஈடுபட வைத்தது. ஆனால், முதலமைச்சர் எடப்பாடியின் காதுகளுக்குச் சென்று சேரவில்லையா. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது எவ்வளவு முக்கியமோ அதே நேரத்தில் இந்த ஆலையை மூடுவதும் அவசியம்தான். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால்,  கல்லூரி மாணவர்கள் முன்னெடுக்கும் இந்தப் போராட்டம் மாவட்டத்தைத் தாண்டி, மாநிலம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டத்தைப்போல விரிவுபடுத்தப்படும். ஆலை மூடும்வரை பல போராட்டங்களை நடத்திக்கொண்டேதான் இருப்போம்" என்றனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!