வெளியிடப்பட்ட நேரம்: 11:29 (02/04/2018)

கடைசி தொடர்பு:11:58 (02/04/2018)

`எடப்பாடி பழனிசாமியிடம் பேசவில்லை..!' - சமாதானத் தூதை நிராகரித்த முத்துக்கருப்பன் எம்.பி

 

முத்துக்கருப்பன்

 காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, அ.தி.மு.க. எம்.பி., முத்துக்கருப்பன், இன்று ராஜினாமா செய்தார். 

முத்துக்கருப்பன்
 

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. முன்னதாக, அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினரான முத்துக்கருப்பன் எம்.பி., டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து,  தன்னுடைய பதவியை 2.4.2018 அன்று ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். அதன்படி, மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடுவை இன்று காலை சந்தித்து, தன்னுடைய ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார் 

 முத்துக்கருப்பன் எம்.பி-யிடம் பேசினோம். 


 உங்களது ராஜினாமாகுறித்து கட்சித் தலைமையுடன் ஆலோசனை நடத்தினீர்களா?

 "ராஜினாமா முடிவு என்பது என்னுடைய உணர்வுபூர்வமானது. ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, இந்த முடிவை எடுத்துள்ளேன். கட்சித் தலைமையிடம் ஆலோசனை நடத்தவில்லை. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அலுவலகத்திலிருந்து எனக்கு போன் அழைப்பு வந்தது. உடனடியாக முதல்வரிடமும் துணை முதல்வரிடமும் பேசுமாறு தெரிவித்தனர். ஆனால் நான் பேசவில்லை."
 
அ.தி.மு.க எம்.பி-க்களில் நீங்கள் மட்டும் ராஜினாமா செய்தது ஏன்?

 "அ.தி.மு.க எம்.பி-க்கள் ராஜினாமாகுறித்து என்னுடன் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது, எல்லோரும் சேர்ந்து ராஜினாமா செய்வோம் என்று கூறினர். ஆனால், நான் முதலில் ராஜினாமா செய்கிறேன். அதற்காக, குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவை இன்று காலை சந்திக்க உள்ளேன். ராஜினாமா கடிதம்கூட தயாராக இருக்கிறது." 

 நீங்கள் கட்சித் தலைமையுடன் ஏன் ஆலோசனை நடத்தவில்லை?

 "கட்சித் தலைமையுடன் ஆலோசனை நடத்தினால், அவர்கள் என்னுடைய ராஜினாமா முடிவுகுறித்து சமரசம் செய்வார்கள். அதனால்தான் கட்சித் தலைமையுடன் ஆலோசனை நடத்தவில்லை."
 
முத்துக்கருப்பன் கொடுக்க உள்ள ராஜினாமா கடிதத்தில், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொடர் சட்டப் போராட்டத்தின் அடிப்படையில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்தாமல், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர்ப் பங்கீடு என இரண்டையும் அமல்படுத்தாமல், பிரதமர் நரேந்திரமோடியின் மத்திய அரசு காலம் தாழ்த்துவது எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. 

 முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், மத்திய அரசுக்கு பலமுறை அழுத்தம்கொடுத்தார்கள். எனது சக உறுப்பினர்கள், அன்புச் சகோதரர்கள், சகோதரிகளான மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், காவிரிப் பிரச்னைக்காக பாராளுமன்றத்தின் உள்ளேயும் பாராளுமன்ற வளாகத்திலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை எம்.பி,  நாடாளுமன்ற அ.தி.மு.க தலைவர் டாக்டர் வேணுகோபால் எம்.பி, நாடாளுமன்ற அ.தி.மு.க துணைத் தலைவர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், முனுசாமி ஆகியோரின் ஆலோசனைகளைப் பெற்று தொடர்ந்து போராடினோம். மத்திய அரசு தொடர்ந்து காலம் தாழ்த்துவதால், மிகுந்த வேதனையுடனும் மிகுந்த மன உளைச்சலுடனும், இன்று இரண்டு வருடங்களுக்கு (2020 ) என் பதவிக்காலம் இருந்தும், எனது  எம்.பி., பதவியை ராஜினாமா செய்கிறேன்"  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.