வெளியிடப்பட்ட நேரம்: 12:11 (02/04/2018)

கடைசி தொடர்பு:13:55 (02/04/2018)

மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் 

ஸ்டாலின்

 

தி.மு.க செயல் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட போன் அழைப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சென்னை  போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெளியில் நின்றுகொண்டிருப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் அவர்களின் வீட்டுக்குள் வெடிகுண்டு வைக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால், கட்டுப்பாட்டு அறையிலிருந்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக கோபாலபுரம், சித்தரஞ்சன் சாலைக்கு ரோந்து போலீஸார் விரைந்தனர். ஸ்டாலின் வீட்டின் அருகில் யாருமில்லை.

அடுத்து, ஸ்டாலின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அங்கு எதுவும் கிடைக்கவில்லை.  வெடிகுண்டு மிரட்டல் என்பது புரளி என்று தெரிந்த பிறகு, போலீஸார் நிம்மதியடைந்தனர். இருப்பினும், கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் நம்பரை போலீஸார் ஆய்வுசெய்தனர். அந்த செல்போன் நம்பரின் சிக்னல், காஞ்சிபுரம் அருகே காட்டியது. இதையடுத்து, ராயப்பேட்டை போலீஸார் காஞ்சிபுரத்துக்குச் சென்று விசாரித்துவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மிரட்டல் விடுத்த நபர் போதை ஆசாமியாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.