வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (02/04/2018)

கடைசி தொடர்பு:13:55 (02/04/2018)

திறந்தவெளிக் கழிப்பிடமாக மாறிய நடைபாதை... வீணான கலெக்டரின் நடவடிக்கை... ஆதங்கத்தில் பொதுமக்கள்

நீலகிரி மாவட்ட கலெக்டரின் நேரடி கண்காணிப்பில் சீரமைக்கப்பட்ட நடைப்பாதை மீண்டும் பழைய நிலைக்கே திரும்பியதால் அவதிக்குள்ளாகும் பொதுமக்கள் ,நகராட்சி நிர்வாகம் நடைபாதையை முறையாக பராமரிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

திறந்தவெளி கழிப்பிடமாக மாறிய நடைபாதை- பொதுமக்கள் அவதி


ஊட்டியில், கலெக்டரின் நேர்முகக் கண்காணிப்பில் சீரமைக்கப்பட்ட நடைபாதை தற்போது, திறந்தவெளிக் கழிப்பிடமாக மாறிவிட்டது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

ஊட்டி மத்திய பேருந்து நிலையம் எதிரில், பாறை முனீஸ்வரர் கோயில் அருகில், எட்டின்ஸ் சாலைக்குச் செல்ல நடைபாதை உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர், நடைபாதையைப் பயன்படுத்திவருகின்றனர். பஸ் ஸ்டாண்டு அருகில் இந்த நடைபாதை அமைந்துள்ளதால், இதைக் குடிமகன்கள் பாராகப் பயன்படுத்திவருகின்றனர். பாதை முழுவதும், காலி மதுபாட்டில்களை வீசுவது, சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால், சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதுடன், பெண்கள், சிறுவர்கள் இந்த வழியைப் பயன்படுத்தத் தயக்கம்காட்டிவந்தனர். மேலும், பஸ் நிலையம் அருகே இரண்டு கழிப்பிடங்கள் இருந்தும் அவற்றைப் பயன்படுத்தாமல், நடைபாதையைப் பயன்படுத்தியதால், திறந்தவெளிக் கழிப்பிடமாக மாறியிருந்தது. இப்பிரச்னைக்குத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்துவந்தது.

நகராட்சி சார்பில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில்,  கடந்த ஆண்டு நீலகிரி மாவட்ட கலெக்டராக இன்னசென்ட் திவ்யா பொறுப்பேற்றார். இப்பிரச்னை, அவரது கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, நேரடியாக அப்பகுதியை ஆய்வுசெய்த அவர், நடைபாதையைச் சீரமைக்குமாறு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் அப்பகுதியை அவசர கதியில் சீரமைத்தது. மேலும், அப்பகுதியில் உள்ள சுவரிலும் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டன. அந்த நடைபாதைப் பகுதி மது அருந்தும் இடமாகவும், சிறுநீர் கழிக்கும் இடமாகவும் மாறாமல் இருக்கும் வகையில், நகராட்சி சார்பில் 7 கடைகள் அமைக்கப்பட்டன.  மாவட்ட கலெக்டரின் அதிரடி நடவடிக்கை பொதுமக்களைப் பெரிதும் கவர்ந்தது. ஆனால், கடை அமைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிய நிலையில், இன்றுவரை கடைகள் திறக்கப்படாமல் உள்ளன.

 அதனால் இப்பகுதி, மீண்டும் திறந்தவெளிக் கழிப்பிடமாக மாறி துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கலெக்டரின் நேரடி கண்காணிப்பில் அழகாகச் சீரமைக்கப்பட்ட நடைபாதை, போதிய பராமரிப்பு இல்லாததாலும், அங்கு சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தின் கவனக்குறைவாலும், மீண்டும் திறந்தவெளிக் கழிப்பிடமாக மாறியுள்ளது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இங்கு அமைக்கப்பட்டுள்ள கடைகளை விரைவில் திறந்து, சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுத்து, இப்பகுதியைத் தூய்மையாக வைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் வலுத்துவருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க