வெளியிடப்பட்ட நேரம்: 13:49 (02/04/2018)

கடைசி தொடர்பு:15:03 (02/04/2018)

`ரவி குடும்பத்துக்கு நான் என்ன பதில் சொல்வேன்..?' - வைகோ வேதனை

 நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து, கடந்த 31-ம் தேதி தீக்குளித்த சிவகாசியைச் சேர்ந்த ம.தி.மு.க நிர்வாகி ரவி, இன்று காலை மரணமடைந்ததை அடுத்து, தனியார் மருத்துவமனையிலிருந்து அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

ரவி உடலுக்கு வைகோ அஞ்சலி

உசிலம்பட்டியில் நடைப்பயணத்திலிருந்த வைகோவுக்குத் தகவல் சொல்லப்பட்டு, அவர் உடனே மதுரைக்குக் கிளம்பி வந்தார். ஜி.ஹெச்சில் வைக்கப்பட்டிருந்த ரவியின் உடலுக்கு அஞ்சலிசெலுத்திய வைகோ, "நடைப்பயணம் ஆரம்பத்திலேயே தடைப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கில் தலைவர்கள் அனைவரும் வாழ்த்திப் பேசிய பின்பு, மறைத்துவைத்திருந்த பெட்ரோலை ஊற்றி நியூட்ரினோவுக்கு எதிராகத் தீக்குளித்துள்ளார். ''நான் மேடையிலிருந்து பார்த்தபோது, நெருப்புப் பந்து வருவதுபோல ஜுவாலையுடன் ஓடி வந்த காட்சி அதிர்ச்சியடைய வைத்துவிட்டது.  தொண்டர்கள் தீயை அணைத்தவுடன் அங்கு நான் சென்றபோது, 'மோடி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிவிட்டார். நியூட்ரினோ திட்டம் தேவையில்லை'' என்றார் ரவி. மருத்துவமனையில் சேர்த்தபோது, ''என்னப்பா  பைத்தியக்காரத்தனமா இப்படி முடிவெடுத்திட்டியே'' என்றேன். 'காலமெல்லாம் நீங்கள் போராடுறீங்க. என்னால் முடிஞ்ச தியாகத்தைச் செஞ்சேன்'' என்றார்.

மாஜிஸ்திரேட் விசாரணையின்போது, 'நியூட்ரினோவை எதிர்த்து நான் சுய நினைவோடுதான் தீக்குளித்தேன், இதன்மூலம் இத்திட்டத்தைத் தடைபோட வேண்டும்' என்று கூறியுள்ளார். லட்சியத்துக்காக உயிரை மாய்த்துக்கொண்ட அவர் குடும்பத்துக்கு நான் என்ன பதில் சொல்வேன். ரவியின் பிள்ளைகளை நான் படிக்கவைப்பேன். ஆனால், ரவியை இழந்து வாடும் குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்ல முடியும்? இனிமேல் இதுபோன்ற உயிரை மாய்த்துக்கொள்ளும் செயலில் ஈடுபடவேண்டாம் என்று வலியுறுத்துகிறேன்'' என்றார். அதைத் தொடர்ந்து, ரவி உடலைச் சுமந்துகொண்டு சிவகாசி சென்ற அமரர் ஊர்தியில், வைகோவும் அமர்ந்துசென்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க