வெளியிடப்பட்ட நேரம்: 14:38 (02/04/2018)

கடைசி தொடர்பு:15:00 (02/04/2018)

திருந்தி வாழ்ந்த பிரபல சென்னை ரவுடி கொலை - ஆட்டோ டிரைவர் ரவுடியான கதை 

ரவுடி

சென்னையில் திருந்தி வாழ்ந்த பிரபல ரவுடியும் அரசியல் பிரமுகருமான முட்டை கோபி, பட்டப்பகலில் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். 

 சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் கோபி என்ற முட்டை கோபி. இவர்மீது சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதுதவிர மாதவரம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளிட்ட சென்னையின் பிற காவல் நிலையங்களிலும் வழக்குகள் உள்ளன. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோபி, சிறைத்துறை உயரதிகாரிக்கும் சென்னை போலீஸ் கமிஷனருக்கும் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், தான் திருந்தி வாழ வாய்ப்பு அளிக்கும்படி குறிப்பிட்டிருந்தார். 
இதையடுத்து கோபி, ஆட்டோ ஓட்டிவந்தார். இருப்பினும் கோபியின் எதிரிகளால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் இருந்தது. அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டனர்.  

இன்று காலை 7 மணியளவில் காமராஜர் சாலையில் ஆட்டோவை நிறுத்திவிட்டுக் கோபி, வெளியில் நின்றுகொண்டிருந்தார். அப்போது, ஐந்து பேர் கொண்ட கும்பல், சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. இதில் ரத்தவெள்ளத்தில் ஆட்டோவின் அருகில் கோபி சரிந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தொடர்ந்து கொடுங்கையூர் போலீஸ் நிலையத்துக்குத் தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சப்-இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த கோபியை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து கோபியைக் கொலைசெய்த கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். 
 
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "ஆட்டோ டிரைவராக இருந்த முட்டை கோபிமீது 40-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. கொடுங்கையூர் காவல் நிலையத்தில் ரவுடிகளின் பட்டியலில் அவரது பெயரும் உள்ளது. ஆட்டோ டிரைவராக இருந்த கோபி பிரபல ரவுடியாக மாறினார். அடிதடி, மிரட்டல், கொலை என தனக்கென்று தனி ரவுடி சாம்ராஜ்ஜியத்தை ஏற்படுத்தினார். இதனால் அவர்மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்தன. இந்தச் சமயத்தில் தன்னுடைய அப்பாவைத் தாக்கிய எதிரிகளை நடுரோட்டில் வைத்து துவம்சம் செய்தார். இவ்வாறு வடசென்னையில் ரவுடி சாம்ராஜ்ஜியத்தில் தனக்கென்று இடம்பிடித்த கோபிக்கு எதிரிகள் அதிகமாகினர். 

 இந்தச் சமயத்தில் கோபியைக் குறித்த தகவல்களைக் காவல்துறைக்கு கூறிய இன்ஃபார்மரான மாதவரத்தைச் சேர்ந்த பாஷா கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கிலும் கோபி, முக்கிய குற்றவாளி. தொடர்ந்து கோபி மற்றும் அவரின் கூட்டாளிகள் அடுத்தடுத்து குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்தனர். காரியத்தை முடித்ததும் நீதிமன்றங்களிலும் சரண் அடைந்துவந்தனர். எதிரிகள், காவல்துறை நெருக்கடியால் சில மாதங்களுக்கு முன்பு கோபி, மனம் மாறினார். இந்தநிலையில், கடந்த ஜனவரி மாதம் கோபி, திருந்தி வாழப்போவதாகக் காவல்துறை உயரதிகாரிகளுக்குக் கடிதம் அனுப்பினார். அதன் பிறகு பா.ம.க-வில் இணைந்து அரசியலில் ஈடுபட்டுவந்தார். இந்தச் சமயத்தில்தான் கோபியின் எதிரியினர் அவரை கொலைசெய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். கொலையாளிகளைத் தேடிவருகிறோம்" என்றனர். 

 முட்டை கோபி என்று அவரை அழைப்பதற்கு என்ன காரணம் என்று காவல்துறையினரிடம் கேட்டதற்குக் கோபியின் கண்கள் முட்டை போல பெரியதாக இருப்பதால் அவரின் கூட்டாளிகள் முட்டை கோபி என்று அழைத்துள்ளனர். இதுதவிர முட்டையை அவர் விரும்பிச் சாப்பிடுவதாகவும் அவருக்கு இந்தப் பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. 

 பட்டப்பகலில் சென்னையில் திருந்தி வாழ்ந்த பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.