சென்னைக் காவலர்களின் மனிதநேயம்! நடுரோட்டில் பொதுமக்களை நெகிழவைத்த சம்பவம்

சென்னைக் காவலர்களின் மனிதநேயம்! நடுரோட்டில் பொதுமக்களை நெகிழவைத்த சம்பவம்

காவலர்கள் மனிதநேயம்


சென்னை வண்ணாரப்பேட்டையில் சாலையில் நிர்வாணமாக வந்த மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு புதிய உடை அணிவித்து, சாப்பாடு வாங்கிக்கொடுத்துள்ளனர் மூன்று காவலர்கள். இந்தச் சம்பவத்தைப் பார்த்து நெகிழ்ந்த அங்கிருந்த பொதுமக்கள், காவலர்களைப் பாராட்டினர்.

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள ஹெச் 3 காவல் நிலைய தலைமைக் காவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஸ்டீபன் மற்றும் காவலர் சஞ்சய் ஆகியோர் காவலர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இன்று காலை சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தபால்நிலையம் முன்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட மூன்று காவலர்களும் வாகனத்தில் வந்துகொண்டிருந்தனர். அப்போது, சாலையில் ஒருவர் நிர்வாணத்துடன் வந்துகொண்டிருந்தார். அதைப்பார்த்த காவலர்கள் மூன்று பேரும் அவரைப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த கோபால் என்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து, புதிய துணிகளை வாங்கி வந்த காவலர்கள், கோபாலுக்கு அதை உடுத்தினர். பின்னர் அவருக்குச் சாப்பாடு வாங்கிக் கொடுத்தனர். இதைப்பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், காவலர்களின் மனிதநேயத்தைக் கண்டு நெகிழ்ந்தனர்.

காவலர்கள் மனிதநேயம்

அப்போது, சம்பவ இடத்துக்கு வந்த சமூக ஆர்வலர் ஒருவர், இவர் எனக்கு நன்றாகத் தெரியும். என்னிடம் ஒப்படையுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து, அவரிடம் கோபாலை காவல்துறையினர் ஒப்படைத்துவிட்டுப் பாதுகாப்புப் பணிக்குச் சென்றனர். தங்கள் பணியின் பரபரப்புக்கு மத்தியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை நன்றாகக் கவனித்து அனுப்பிய காவலர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!