வெளியிடப்பட்ட நேரம்: 14:56 (02/04/2018)

கடைசி தொடர்பு:15:05 (02/04/2018)

காவிரி: தலைமை நீதிபதியின் கருத்து விசித்திரமாக இருக்கிறது - மார்க்சிஸ்ட் கருத்து

காவிரி- மார்க்சிஸ்ட் கே.பாலகிருஷ்ணன்

 காவிரி தீர்ப்பில் `ஸ்கீம்’ என்பதையும் காவிரி மேலாண்மை வாரியம் என்பதையும் வேறுபடுத்தி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மிஸ்ரா கருத்து தெரிவித்துள்ளது விசித்திரமாக உள்ளது என்று சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா “உச்ச நீதிமன்றம் வெளியிட்ட காவிரி தீர்ப்பில் செயல்திட்டம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலாண்மை வாரியம் என்று குறிப்பிடப்படவில்லை. காவிரி பிரச்னையை முழுமையாகத் தீர்ப்பதற்கு உரியத் திட்டத்தை ஸ்கீம் என்று குறிப்பிட்டோம்” எனக் கூறியுள்ளார். அதாவது, ஸ்கீம் என்பதையும், காவிரி மேலாண்மை வாரியம் என்பதையும் வேறுபடுத்தி அவர் கருத்து தெரிவித்துள்ளது விசித்திரமாக உள்ளது” என்று பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மேலும், “காவிரியில் தமிழகத்துக்கு தீர்மானிக்கப்பட்டுள்ள தண்ணீர் கிடைப்பதற்கு உரிய அதிகாரங்களைக் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் எனவும் அதற்கான அனைத்து செயல்திட்டங்களையும் நடுவர் மன்றம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. ஏற்கெனவே, உச்ச நீதிமன்றம் இதை ஏற்றுக்கொள்வதாகத் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளது பலவிதமான சந்தேகங்களுக்கு இடமளிக்கிறது. எனவே, நடுவர் மன்றம் தெளிவாகக் குறிப்பிட்ட உரிய அதிகாரங்களைக் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்பதற்கான அனைத்து வாதங்களையும்  உச்ச நீதிமன்றத்தின் முன் வற்புறுத்தி சாதகமான தீர்ப்பை பெற வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் உயிர் நாடியான காவிரி பிரச்னையில் உரிய அதிகாரங்களைக் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதே நிரந்தரத் தீர்வாக அமையும்; இதை உறுதிபடுத்தத் தமிழகமே ஒருங்கிணைந்து குரல்கொடுக்க வேண்டிய முக்கிய தருணம் இது என்பது தங்கள் கட்சியின் அழுத்தமான கருத்து என்றும் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.