`போராட்டங்களுக்குத் தடை விதிக்க முடியாது!’ - உயர் நீதிமன்றம் #CauveryIssue

காவிரி நடுவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, பல்வேறு அமைப்பினர் அறிவித்துள்ள போராட்டங்களுக்குத் தடைவிதிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது.   

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

காவிரி நடுவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 16-ம் தேதி தீர்ப்பளித்தது. அதில், 6 வாரத்திற்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்தாமல் மத்திய அரசு அலட்சியமாக இருந்துவருகிறது.

இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நடத்தப்படும் போராட்டங்களுக்குத் தடை கோரி, உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை நீதிபதிகளான செல்வம் மற்றும் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக, ரமேஷ் என்பவர் முறையிட்டார். அதில், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஏப்ரல் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை அரசியல் கட்சியினர், விவசாய சங்கம், வணிகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கும். எனவே, போராட்டத்திற்கு நீதிமன்றம் தாமாக முன் வந்து தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி, போராட்டத்திற்குத் தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!