ஸ்டெர்லைட் ஆலையை தற்போது மூடியது தமிழக அரசுதான்! சொல்கிறார் அமைச்சர் கருப்பண்ணன் | TN government reason behind closure of sterlite, says Minister K. C. Karuppannan

வெளியிடப்பட்ட நேரம்: 16:07 (02/04/2018)

கடைசி தொடர்பு:16:07 (02/04/2018)

ஸ்டெர்லைட் ஆலையை தற்போது மூடியது தமிழக அரசுதான்! சொல்கிறார் அமைச்சர் கருப்பண்ணன்

கே.சி.கருப்பண்ணன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென  உச்ச நீதிமன்றம் 6 வார காலம் கெடு விதித்து, அந்தக் கெடு முடிந்தும் மத்திய அரசு அமைக்கவில்லை. இதைக் கண்டித்து பல அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் தமிழகம் முழுவதும் தீவிர போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதற்கிடையே, அ.தி.மு.க சார்பிலும் தமிழகம் முழுவதிலும் உள்ள மாவட்டத் தலைநகர்களில் நாளை மறுநாள்   (ஏப்ரல் 4) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவிருக்கிறது.

அந்த வகையில், ஈரோட்டில் நடைபெறவிருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் மற்றும் மாவட்டத்திலுள்ள எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கலந்துகொள்ளவிருக்கின்றனர். ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கான ஏற்பாடுகள் நடந்துவரும் நிலையில், அதைப் பார்வையிடுவதற்காக சுற்றுச்சுழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் வந்திருந்தார்.

ஸ்டெர்லைட்

உண்ணாவிரதப் போராட்டத்துக்கான பந்தல் அமைக்கும் பணிகளைப் பார்வையிட்டவர், கட்சி நிர்வாகிகளிடம் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்தவர், “காவிரி விவகாரத்தில் கடுமையான சட்டப் போராட்டங்களை நடத்தி, நடுவர் மன்றத் தீர்ப்பைப் பெற்றுத்தந்தவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான். அந்த வகையில்,  தற்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவிருக்கிறோம். மக்களுக்கு எந்தவித இடையூறும் செய்யாத வகையில் இந்தப் போராட்டம் அமையும். நாளைக்கு ஈரோட்டில் நடைபெறும் போராட்டத்தில் 10,000 பேர் கலந்துகொள்ளவிருக்கின்றனர்” என்றார்.

ஸ்டெர்லைட் மற்றும் நியூட்ரினோ திட்டம்குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தவர், “ஸ்டெர்லைட் திட்டத்தை எதிர்த்து மக்கள் போராடிவருகின்றனர். ஆனால், கமல்ஹாசன் போன்றோர் திட்டமிட்டே ஸ்டெர்லைட் பிரச்னையைத் தூண்டிவிடுகின்றனர். தமிழக அரசின் உத்தரவால்தான் ஸ்டெர்லைட் ஆலை தற்போது மூடப்பட்டிருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், மாநில அரசு ஆலோசித்து முடிவெடுக்கும். நியூட்ரினோ மற்றும் ஓ.என்.ஜி.சி திட்டங்களுக்கு மத்திய அரசுதான் அனுமதி கொடுத்திருக்கிறது. மாநில அரசு இன்னும் அனுமதி கொடுக்கவில்லை. அதற்கென 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, பரிசீலனை மேற்கொள்ளப்படும்” என்றார்.

"பராமரிப்புப் பணி காரணமாக ஆலை 15 நாள்கள் மூடப்படுவதாக ஸ்டெர்லைட் நிர்வாகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.