வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (02/04/2018)

கடைசி தொடர்பு:17:26 (02/04/2018)

`ஐ கால் டு மை டாடி' - சென்னை போலீஸை மிரட்டிய ஏ.டி.ஜி.பி மகள்

போலீஸ்

சொகுசு காரை சோதனை நடத்த முயன்ற போலீஸாரை, ஏ.டி.ஜி.பி மகள் என்று பெண் ஒருவரும் அவருடன் வந்த ஆணும் மிரட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் போராட்டம் நடத்த பொதுமக்கள் திரண்டனர். அதைத்தடுத்து கடற்கரைப் பகுதியைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர் போலீஸார். அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளதோடு சர்வீஸ் சாலையில் யாரும் செல்ல அனுமதிக்கவில்லை. இந்தநிலையில் சென்னை கடற்கரை சர்வீஸ் சாலைக்குள் இரவில் சொகுசு கார் செல்ல முயன்றுள்ளது. அதைப் பணியிலிருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீஸாருக்கும் காரில் வந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது நடந்த வாக்குவாதம் வீடியோவாகச் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. 

2.29 நிமிடம் கொண்ட அந்த வீடியோ பதிவில் உள்ள ஆடியோவில், ``காரில் வந்த ஆண், போலீஸாரைப் பார்த்து 'உங்களுக்கு என்ன பிராப்ளம். எதற்கு செக் செய்கிறீர்கள்?' என்று கேட்கிறார். அதற்கு, போலீஸார் 'கார் உள்ளே செல்லக் கூடாது' என்று பதிலளிக்கின்றனர். தொடர்ந்து காரில் வந்த ஆண், `அருகிலிருக்கும் பெண்ணைக் காண்பித்து இவர், டி.ஜி.பி-யின் மகள்' என்று சொல்கிறார். மேலும், `நான் குடித்திருக்கிறேனா என்று பாருங்கள்' என்று கேட்கிறார். அதற்குள் அந்தப் பெண், போலீஸைப் பார்த்து `எதற்காக வீடியோ எடுக்கிறீர்கள்... ரெக்கார்டு பண்ணாதீங்க' என்று சொல்லியபடியே `ஐ கால் டு மை டாடி' என்று ஆவேசமாகப் பேசுகிறார். அடுத்து `உங்களுடைய பெயர் என்ன?' என்று கேட்கிறார். அதற்குக் கார்த்திகேயன், கான்ஸ்டபிள் என்று பதிலளிக்கிறார். `நீங்கள் இங்கு வேலைபார்க்க வேண்டாமா' என்று கூறியபடி `இந்த வீடியோவை இன்டர்நெட்டில் போடப்போகிறீர்களா?' என்பதோடு அந்த ஆடியோ முடிவடைகிறது.

இவர்களுக்குள் வாக்குவாதம் நடக்கும்போது, போலீஸாரின் வாக்கிடாக்கி அலறுகிறது. மெரினா என்றும் வாக்கிடாக்கியில் அழைக்கப்படுகிறது. சம்பவம் நடந்த இடம் பாலவாக்கம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், போலீஸ் தரப்பில் வீடியோ குறித்து யாரும் பதிலளிக்கவில்லை. 'விசாரித்துக்கொண்டிருக்கிறோம்' என்று மட்டும் சென்னை போலீஸார் தெரிவித்தனர். டி.ஜி.பி-யின் மகள் என்று அந்தப் பெண் கூறினாலும், அந்த கான்ஸ்டபிள் எதற்கும் பயப்படாமல் பதிலளிக்கிறார்.  

வீடியோ குறித்து போலீஸார் கூறுகையில், "பாலவாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடத்தில் நீண்ட நேரமாக ஒரு சொகுசு கார் நின்றுள்ளது. இதைப்பார்த்த கான்ஸ்டபிள் கார்த்திகேயன் அங்கு சென்றுள்ளார். காரின் கதவு உடனடியாகத் திறக்கப்படவில்லை. இதனால், அவர் காரை சுற்றிவந்துள்ளார். அதன்பிறகு காருக்குள் இருந்து ஆணும் பெண்ணும் இறங்கிவந்துள்ளனர். பிறகு, இருதரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. உடனடியாகக் கார்த்திகேயன், தன்னுடைய செல்போனில் நடந்த சம்பவங்களை வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அந்த வீடியோ எப்படி வெளியானது என்று விசாரணை நடந்துவருகிறது. இதற்கிடையில் வீடியோ எடுத்த கார்த்திகேயன்மீது  துறைரீதியான நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது" என்றனர். 

 கார்த்திகேயன் வீடியோ எடுத்திருந்தாலும் அதை உயரதிகாரிகளின் கவனத்துக்குதான் கொண்டு சென்றிருக்க வேண்டும் என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையில் கார்த்திகேயன்மீது ஏ.டி.ஜி.பி-யின் மகள் தரப்பிலும் புகார் கொடுக்கப்படவுள்ளது. அதன் அடிப்படையில் கார்த்திகேயன்மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. 

 காரின் எண் வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. இதனால் அந்தக் கார் குறித்த விவரங்களைச் சேகரித்தோம். அதில், செங்கல்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒரு கம்பெனி பெயரில் கார் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், காரின் உரிமையாளர் யார் என்ற விவரம் குறிப்பிடப்படவில்லை காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு முகவரியைக் காட்டுகிறது. விசாரணையில் சொகுசு காரில் வந்த பெண், தமிழக காவல் துறையில் ஏ.டி.ஜி.பி-யாக இருக்கும் ஒருவருடைய மகள் என்பது தெரியவந்துள்ளது.