வன்கொடுமை தடுப்புச் சட்டம் - வட மாநிலங்களில் போராட்டம், 4 பேர் பலி #BharatBandh

வன்கொடுமை தடுப்புச் சட்டம்

காவிரி விவகாரத்தில் தமிழ்நாடே போராட்டக்களமாகி இருக்க, வடமாநிலங்களில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாகப் பல மாநிலங்களில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறைகள் வெடித்துள்ளன. மத்தியப்பிரதேசத்தில் மட்டும் நான்கு பேர் இதில் உயிரிழந்துள்ளனர். 

கடந்த வாரம் வழக்கு ஒன்றில் உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல், யுயுலலித் ஆகியோர் அடங்கிய அமர்வு, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கூறியிருந்தது, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், தலித்திய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் விமர்சனத்தைச் சந்தித்தது. முக்கியமாக, இச்சட்டத்தின்படி வழக்கு பதியப்படும் எவரையும் உடனே கைதுசெய்ய வேண்டியதில்லை; பொது ஊழியராக இருக்கும் ஒருவர்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி வழக்கு தொடுக்கும் முன்பு அவரின் துறை உயர் அதிகாரியிடம் அனுமதி வழங்க வேண்டும் என்பன போன்ற உச்ச நீதிமன்றத்தின் புதிய உத்தரவுகளால், சட்டத்தின் தன்மையே பாழாக்கப்பட்டுவிடும் என அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளால் இன்று நாடு முழுவதுமான முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

வன்கொடுமை தடுப்புச் சட்டம்

மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் மற்றும் மொரினா ஆகிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் அளவுக்கு வன்முறைகள் ஏற்பட்டன. இங்கு நடந்த வன்முறையில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் பாமரில் வாகனங்கள், கடைகள் போன்றவை தாக்குதலில் சேதமடைந்தன. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டிலும் வன்முறைகள் நிகழ்ந்துள்ளன. 

குவாலியரில் நடந்த வன்முறை சம்பவங்களில் 19 பேர் காயம் அடைந்துள்ளனர்; இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து குவாலியரில் நாளை காலை 6 மணிவரை இணைய சேவை முடக்கிவைக்கப்பட்டுள்ளது. ம.பி-யில் உள்ள சாகரில் 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையில் மோதல்களும் நிகழ்ந்தன. இதில் பலரும் காயமடைந்தனர். பீகார் மாநிலத்தின் பல இடங்களில் சி.பி.ஐ- மாலெ- விடுதலை கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அரா எனும் இடத்தில் அவ்வமைப்பினர் ரயில் மறியலில் இறங்கினர். 
பஞ்சாப் மாநிலத்தில் அன்றாட வாழ்க்கை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. இன்று நடக்கவிருந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தள்ளிவைத்துள்ளது. போக்குவரத்துச் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!