`வன்கொடுமை சட்டம் செயலிழந்தால் எஸ்.சி / எஸ்.டி மக்கள் பாதிக்கப்படுவர்' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிப்பு | Dalits and tribals will be affected if the Sc St act diluted

வெளியிடப்பட்ட நேரம்: 18:39 (02/04/2018)

கடைசி தொடர்பு:19:07 (02/04/2018)

`வன்கொடுமை சட்டம் செயலிழந்தால் எஸ்.சி / எஸ்.டி மக்கள் பாதிக்கப்படுவர்' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிப்பு

வன்கொடுமை சட்டம்

சேலம் பழைய பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ள தலைமை தபால் நிலையத்துக்கு முன்பு காங்கிரஸ் கட்சியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுவிழக்கச் செய்ததைக் கண்டித்தும் வன்கொடுமை சட்டம் செயலிழந்தால் எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்தப் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொண்டார்கள்.  

இந்தப் போராட்டத்துக்கு தலைமை ஏற்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயபிரகாஷ், ''1989-லிருந்து நடைமுறையில் உள்ள எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்களின் மீதான வன்கொடுமை சட்டம் வலுவிழந்து நீர்த்துப்போகும் வகையில் 23.3.2018-ல் வந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள்ளது. எஸ்.சி / எஸ்.டி மக்கள் மீதான தாக்குதல்கள், வன்கொடுமைகள், அவர்களின் வீடுகளுக்குத் தீ வைத்தல், பாலியல் தொல்லைகள், வன்முறைகள் இன்றும் இந்தியாவில் பல பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.

மதத்தால், சாதியால், மொழியால் மக்களைப் பிரித்து ஆளும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வரும் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசும், பா.ஜ.க ஆளும் மாநில அரசுகளும் எஸ்.சி / எஸ்.டி உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவும் அவர்கள் நலனில் அக்கறை இன்றியும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பல சரத்துகள் வலுவிழக்கச் செய்வது அந்த மக்கள் மீதான நேரடி தாக்குதலாகும். அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ள நிலை உருவாகிவிடும்.

எனவே, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுத்தாக்கல் செய்து 1989-ம் ஆண்டு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு வலுவான அழுத்தம் தர வேண்டும். இதற்காகக் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மகாத்மா சிலை முன்பு குரல் எழுப்ப உள்ளார். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தியுள்ளார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் வழிகாட்டுதலின்படி அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் 1989-ல் இருந்துவந்த வன்கொடுமை சட்டத்தை மீண்டும் அமல்படுத்திட மத்திய பா.ஜ.க அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க