`வேட்டி அழுக்காகிடும் உட்கார அட்டை கொடு!’ தி.மு.க நிர்வாகியின் அட்ராசிட்டி | DMK administrator atrosity in cauvery management board protest

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (02/04/2018)

கடைசி தொடர்பு:08:13 (03/04/2018)

`வேட்டி அழுக்காகிடும் உட்கார அட்டை கொடு!’ தி.மு.க நிர்வாகியின் அட்ராசிட்டி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தி.மு.க உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் சார்பில் நடந்த சாலைமறியல் போராட்டத்தில், 'சாலையில் அமர்ந்தால் வேட்டி அழுக்காகிவிடும், உட்காருவதற்கு அட்டை கொடுங்கள்' எனக் கேட்டு அட்டை கொடுத்த பிறகே அதை சாலையில் போட்டு உட்கார்ந்து, தி.மு.க நிர்வாகி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரின் இந்தச் செயல், பார்ப்பவர்களை முகம்சுழிக்க வைத்ததாக சக நிர்வாகி ஒருவர் வேதனைப்பட்டுக்கொண்டார்.

திமுக நிர்வாகி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, தி.மு.க உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து தமிழகம் முழுவதும் சாலைமறியல் போராட்டங்களை இன்று நடத்தியது. இதேபோல தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரே, தி.மு.க மற்றும் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் சேர்ந்து சாலைமறியல் போராட்டம் செய்தனர். இதற்காக வந்திருந்த அனைத்து நிர்வாகிகளும் சாலையில் அப்படியே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், தி.மு.க-வின் மாநகரச் செயலாளர்  டி.கே.ஜி நீலமேகம் மட்டும் சாலையில் அமராமல் நின்றுகொண்டே இருந்தார். மற்ற நிர்வாகிகள் அவரை அமரச் சொல்ல, 'அப்படியே சாலையில் உட்கார்ந்தால் வேட்டி அழுக்காகிவிடும் அட்டை கொண்டு வரச்சொல்லுங்கள் உட்காருகிறேன்' எனச் சொல்லியிருக்கிறார். பின்னர், அருகில் இருந்த கடை ஒன்றில் அட்டை வாங்கிவந்து கொடுத்தப் பிறகு, அதை சாலையில் போட்டு அமர்ந்தார். பின்னர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், அதற்கு அழுத்தம் கொடுக்காத மாநில அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர்.  தி.மு.க நிர்வாகியின் இந்தச் செயல், மற்றவர்களை முகம்சுழிக்க வைத்ததோடு, தமிழகத்தின் வாழ்வாதாரத்துக்காக நடைபெற்றுவரும் இந்தப் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில்கூட இப்படி வேஷ்டி சட்டை அழுக்காகாமல் இருக்க வேண்டும் என நினைக்கிறார்களே என சக நிர்வாகி ஒருவர் வேதனைப்பட்டுக்கொண்டார். 

மேலும், நேற்று ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் ஆரம்பிப்பதற்குத் தாமதமானதால், எவ்வளவு நேரம்தான் நிற்பது; உட்கார்வதற்கு சேர் கொடுங்க என்றதோடு, அருகில் இருந்த தொண்டரிடம் நான் சொன்னேன் என்று சொல்லி, அருகில் இருந்த கடையில் 'சேர் வாங்கி வாருங்கள்' எனச் சொன்னார். சேர் வந்த பிறகு, அதை சாலை ஓரத்தில் போட்டு அமர்ந்திருந்த அவர், போராட்டம் ஆரம்பித்ததும் அதில் கலந்துகொண்டார்.  இதுபோன்ற தி.மு.க நிர்வாகிகள் ஒரு சிலரின் செயல்பாட்டால், ஸ்டாலினுக்குதான் அவப்பெயர் உண்டாகிறது என நொந்துகொண்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க