வெளியிடப்பட்ட நேரம்: 19:57 (02/04/2018)

கடைசி தொடர்பு:07:33 (03/04/2018)

''தமிழகத்தில், பகுத்தறிவுப் பிரசாரங்கள் தொய்வாக இருக்கின்றன'' - இரா.முத்தரசன் வேதனை

''தமிழகத்தில், பகுத்தறிவுப் பிரசாரங்கள் தொய்வாக இருக்கின்றன'' - இரா.முத்தரசன் வேதனை

இரா.முத்தரசன்

'இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இரண்டாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் இரா.முத்தரசன்!' 
கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்களால் ஒருமனதாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதுதான் இதில் விசேஷம். பதவிச் சண்டைகளைப் பார்த்தே பழக்கப்பட்டுபோன மக்களுக்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்தத் தேர்வுமுறை ஆச்சர்ய அதிர்ச்சி!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டின் இறுதி நாளான மார்ச் 31-ம் தேதியன்று கட்சியின் 'மாநிலச் செயலாளர் தேர்வு' நடைபெற்றது. இதற்காகக் கூடிய மாநில செயற்குழு, 'மீண்டும் இரா.முத்தரசனே செயலாளராகத் தொடர்வார்' என்று ஒருமனதாக முடிவெடுத்து அறிவித்துள்ளது. இந்த முடிவை முன்மொழிந்தவர் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.மகேந்திரன். கடந்தமுறை இதே மாநிலச் செயலாளர் பதவிக்கு இரா.முத்தரசனோடு போட்டியிட்டு, ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தவர் இவர். 

''ஒற்றுமையை வலியுறுத்துவதுதான் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை. அந்தவகையில்தான் கட்சிக்குள் எந்தவிதப் பேதமும் இல்லாமல் ஏகமனதாக இரா.முத்தரசன் தோழர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கட்சியின் இந்த முடிவு தோழர்கள் அனைவருக்குமே மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கிறது'' என்று பூரிப்படைகிறார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளருமான ஜி.ஆர்.ரவீந்திரநாத்.

''கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் முறை என்பது ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டது. எப்போதுமே இங்கே ஒற்றைத் தலைமை கிடையாது; கூட்டுத் தலைமைதான். இதைத்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மையானக் கடமையாகப் பார்க்கிறோம். அந்தவகையில், இந்தக் கூட்டுத்தன்மையை மென்மேலும் வளர்த்தெடுப்பதற்கான முயற்சியாகவே கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்களால் ஒருமித்தக் கருத்துடன் தோழர் இரா.முத்தரசன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதன்மூலம் கட்சியின் ஒருமைப்பாடு வளர்வதோடு தமிழக அரசியலிலும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

மற்றக் கட்சிகளில் தலைமையை மையமாகக் கொண்டுதான் முடிவுகள் எடுக்கப்படும்; கட்சியின் நடவடிக்கைகளும் ஒற்றைத் தலைமையை மையப்படுத்தியே நடந்துவரும். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பே, 'கூட்டுத் தலைமை'யை மையமாகக் கொண்ட ஜனநாயகக் கட்சியாக இருப்பதுதான். கட்சியின் ஒற்றுமை-ஒருமைப்பாடு மற்றும் தமிழ்நாட்டு அரசியலில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கும் கூட்டுத் தலைமை அவசியமாகிறது'' என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினரும் மூத்த தலைவருமான சி.மகேந்திரன்.

சி.மகேந்திரன்

மீண்டும் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தோழர் இரா.முத்தரசனிடம் பேசினோம்....

''கட்சியை மேலும் பலப்படுத்துவதற்கான முடிவுகள் மன்னார்குடி மாநாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கட்சிக்குள் புதிதாக பெண்கள் மற்றும் இளைஞர்கள் - மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த முயற்சியை மேலும் தீவிரப்படுத்தும்விதமாக கட்சியின் கொள்கைக் கோட்பாடுகளை தத்துவார்த்த ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மக்களிடையே விளக்கிக்கூறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடிவெடுத்திருக்கிறோம். 

இன்றைய அரசியல் சூழலில், வளர்ந்துவரும் வகுப்புவாத அரசியலை முறியடிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழகம் இருக்கிறது. பகுத்தறிவுப் பிரசாரங்கள் பலமாக இருந்த இம்மண்ணில், தற்போது அந்தப் பணிகள் சற்று தொய்வடைந்த நிலையில் இருக்கின்றன. எனவே, மக்களிடையே மூடப் பழக்க வழக்கங்களுக்கு எதிரான விழிப்பு உணர்வுப் பிரசாரங்களை மீண்டும் முன்னெடுக்கவிருக்கிறோம். கலை இலக்கிய அமைப்புகளோடு கட்சியும் நேரடியாக இந்தப் பிரசாரங்களில் ஈடுபடவிருக்கிறது!'' என்றார்.

இன்றைய விஞ்ஞான யுகத்திலும் மக்களிடையே மூடப்பழக்க வழக்கங்கள் பெருகிவருகின்றன. இந்தப் பிற்போக்குத்தனங்களை தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு ஆட்சிக் கட்டிலில் அமரத் துடிக்கும் சுயநல அரசியல்வாதிகளும், பிரிவினைவாதிகளும் போட்டிபோட்டு வருகின்றனர். பகுத்தறிவுச் சிந்தனைகள் வேர்விட்டு நின்ற தமிழ்மண்ணில் சாதி - மத வேற்றுமை போற்றும் விஷச் செடிகள் வளரவிடாது பாதுகாக்கும் கடமையில்  கம்யூனிஸ்ட்டுகளோடு கைகோப்போம்!


டிரெண்டிங் @ விகடன்