ராமநாதபுரம் அருகே மத மோதல்களைத் தூண்டிவிடும் கும்பலைச் சேர்ந்த மூவர் ஆயுதங்களுடன் கைது! | Ramnad police arrest 3 persons with arms

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (02/04/2018)

கடைசி தொடர்பு:07:51 (03/04/2018)

ராமநாதபுரம் அருகே மத மோதல்களைத் தூண்டிவிடும் கும்பலைச் சேர்ந்த மூவர் ஆயுதங்களுடன் கைது!

தமிழகத்தில் மத மோதல்களை தூண்டிவிடுவது, இஸ்லாமியத்துக்கு எதிராகச் செயல்படுபவர்களை தாக்குவது உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் தொடர்புடைய குழுவில் உள்ள 10 பேரில் பயங்கர ஆயுதங்களுடன் 3 பேரை கைது செய்திருப்பதாகவும், தலைமறைவாக இருக்கும் 7 பேரைப் பிடிக்க விசாரணை முடுக்கி விடப்பட்டிருப்பதாகவும் ராமநாதபுரம் எஸ்.பி.ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்தார்.

தமிழகத்தில், மத மோதல்களைத் தூண்டிவிடுவது, இஸ்லாமிய மதத்துக்கு எதிராகச் செயல்படுபவர்களைத் தாக்குவது உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் தொடர்புடைய குழுவைச் சேர்ந்த 10 பேரில், பயங்கர ஆயுதங்களுடன் 3 பேரை கைதுசெய்திருப்பதாகவும், தலைமறைவாக இருக்கும் 7 பேரைப் பிடிக்க விசாரணை முடுக்கிவிடப்பட்டிருப்பதாகவும் ராமநாதபுரம் எஸ்.பி.,ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்தார்.

ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா


இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''மத மோதல்களைத் தூண்டுவது, இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிரானவர்கள்மீது தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவோரில் 3 பேரை கைதுசெய்துள்ளோம். இந்த மூவரில், முகம்மது ரியாஸ் என்பவரை கீழக்கரையில் அவரது வீட்டிலும், முபாரிஸ் அகமது (21) என்பவரை விழுப்புரத்திலும், அபுபக்கர் சித்திக் என்பவரை கீழக்கரையிலிருந்து தேவிபட்டினத்துக்குப் பேருந்தில் செல்லும்போதும் கைதுசெய்துள்ளோம். இக்குழுவில், மொத்தம் 10 பேர் உள்ளனர்.   மற்ற 7 பேரையும் கைதுசெய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாகத் தேடி வருகிறோம்

இந்தக் குழுவின் தலைவராக ஷேக்தாவூத் என்பவர் செயல்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் வசித்துவந்த இவர், கடந்த ஓராண்டாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் வசித்துவருகிறார். குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் முத்துப்பேட்டையில் நடந்துள்ளது. இரண்டாவதாக கீழக்கரையில் நடக்கும்போது 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தேவிபட்டினத்தைச் சேர்ந்த 2 பேர், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட மொத்தம் 7 பேர் தலைமறைவாக இருக்கின்றனர்.

இவர்கள், பெரும்பாலும் செல்போனில் பேசிக்கொள்ளாமல் வாட்ஸ்அப் மூலம் தகவல்களைப் பரிமாறிக்கொண்டு செயல்பட்டுள்ளனர். செல்போனில் பேசினால், அதன்மூலம் பிறர் தெரிந்துகொள்வார்கள் என்பதால், அதைத் தவித்துள்ளனர். வாட்ஸ்அப்பில் தகவல்களைப் பரிமாறிக் கொண்ட்பின், உடனுக்குடன் அதை அழித்துவிடவும் செய்திருக்கிறார்கள். எனவே, அவர்களைப் பற்றிய முழுமையான தகவல்களை அறிந்துகொள்ள மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. இருப்பினும் மற்றவர்களையும் விரைவில் கைதுசெய்துவிடுவோம்.

இஸ்லாமியக் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்படுபவர்களைத் தாக்குவது, சிறையில் இருப்போரை விடுவிக்கவும், தேவையான ஆயுதங்களைக் கொள்முதல் செய்யவும், போதுமான நிதியைத் திரட்டுவது, தமிழகத்தில் மத மோதல்களைத் தூண்டிவிடுவது உள்ளிட்ட செயல்களைச் செய்யும் வகையில் இக்குழுவினர் செயல்பட்டிருப்பது, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இக்குழுவில் உள்ள 10 பேர் மீதும் கொலை முயற்சி வழக்குகள், போதைப் பொருள் கடத்தியது உள்ளிட்ட குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இவர்கள் பயன்படுத்திய செல்போன்கள்மூலம் கிடைக்கும் ஒரு சில தொழில்நுட்பத் தகவல்கள் மூலம், அடுத்தகட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் வசிப்போருடன் இவர்களுக்குத் தொடர்பு இருக்கிறதா என்பது பற்றியும். அப்படி தொடர்பிருந்தால் அவர்களது வங்கிக் கணக்குகளை முடக்குவது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ராமநாதபுரத்தில் கடந்த மார்ச் மாதம் 29-ம் தேதி, பா.ஜ.க-வின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வீரபாகு தாக்கப்பட்ட சம்பவத்துக்கும் இவர்களுக்கும் தொடர்பு எதுவும் இருக்கிறதா என்பதுகுறித்தும் விசாரணை நடத்திவருகிறோம். வீரபாகு தாக்கப்பட்ட சம்பவத்திலும் தொடர்புடைய குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம். அவர்களும் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள்'' என்று அவர் தெரிவித்தார்.