`ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு!’ - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட குமரெட்டியாபுரம் மக்கள்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குமரெட்டியாபுர மக்களுக்கு ஆதரவாக, போராட்டக் களத்தில் குதித்த பண்டாரம்பட்டி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத்  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் குமரெட்டியாபுரம் மக்களுக்கு ஆதரவாக, போராட்டக் களத்தில் குதித்த பண்டாரம்பட்டி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட குமரெட்டியாபுரம் மக்கள் 

தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, 50-வது நாளாக குமரெட்டியாபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பிப்ரவரி  மாதம், மாவட்ட ஆட்சியரிடம் ஆலையின் விரிவாக்கத்திற்கு எதிராக மனு கொடுத்த கிராம மக்கள், தொடர்ந்து தங்கள் கிராமத்தில் போராட்டத்தைத் தொடங்கினர். கடந்த மார்ச் 24-ம் தேதி, ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்தை எதிர்த்து, அதை நிரந்தரமாக மூட வலியுறுத்திப் பிரம்மாண்ட  பொதுக்கூட்டம்  நடத்தினர். அதின் பின், போராட்டம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. அதுவரை  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடும் கிராம மக்களைக் கண்டுகொள்ளாமல் இருந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள், குமரெட்டியாபுரம் கிரமத்திற்கே சென்று, தங்களின் ஆதரவைத் தெரிவித்துவருகின்றனர். 

pandarampatti villagers protest

போராட்டத்தின் 49-வது நாளான நேற்று, குமரெட்டியாபுரம் மக்களுக்கு  ஆதரவாக அருகிலுள்ள பண்டாரம்பட்டி கிராம மக்களும் தொடர் போராட்டத்தைத் தொடங்கினர். போராட்டத்தின் 50-வது நாளான இன்று, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த முற்றுகைப் போராட்டத்தில், கல்லுாரி மாணவர்களும் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின் போது, சுடலி என்ற பெண் மயங்கி விழுந்தார். அவரை, 108 ஆம்புலன்ஸ் வேன் வந்து, மருத்துவமனைக்கு  கொண்டுசென்றது. இதனால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தவர்களிடமிருந்து  ஆட்சியர் வெங்கடேஷ், மனுவை  வாங்கவில்லை.  டி.ஆர்.ஓ வந்து மனுக்களை வாங்கினார். இதனால் கோபம் அடைந்த மாணவர்கள், கிராம மக்கள், மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் சங்குக் கூடம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, ஆட்சியர் நேரில் வந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டார். கல்லூரி மாணவர்கள்,  சமூக அமைப்புகள், வணிகர்கள், கிராமத்தினர் எனப் பல தரப்பினரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிவருவதால், ஆலைக்கான எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!