கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு மாடுகளை கட்டி வேட்பாளர்கள் போராட்டம்!

விராலிமலை அருகே கூட்டுறவு சங்கத்தேர்தலுக்கு முறையாக விண்ணப்பம் பெறவில்லை என்றும் தேர்தல் அதிகாரிகள் உரிய விளக்கமளிக்கவில்லை என கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பூட்டிக்கிடந்த அலுவலகம் முன்பு தங்கள் மாடுகளை கட்டிவைத்து இன்று (02.03.2018) நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

 கூட்டுறவு சங்கம்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்தைச் சேர்ந்த வேலூர் என்ற கிராமத்தில்  தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கடந்த மார்ச் 26-ம் தேதி மனு தாக்கல் தொடங்கியது. இதில் தேர்தல் அலுவலராக கூட்டுறவு சங்க பதிவாளர் அசோக்குமார் நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த 27-ம் தேதி கலந்தாய்வு நடைபெற்று, 28-ம் தேதி வேட்பாளர் இறுதிப்பட்டியலை தயாரித்து அதனை அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டி இருக்க வேண்டும். ஆனால், 28-ம் தேதி மாலை வரை அதற்கான அறிவிப்பு ஏதும் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படவில்லை. இதனால் அன்று காலை முதல் மாலை வரை காத்திருந்த மனுத் தாக்கல் செய்தவர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இதுகுறித்து தேர்தல் அலுவலரிடமும், அலுவலகச் செயலாளர் பழனிச்சாமியிடமும் மனுதாக்கல் செய்தவர்கள் கேட்டபோது, அவர்கள் எந்த பதிலும் கூறாமல் அலுவலகத்திலிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கடந்த 29-ம் தேதி முதல் 1-ம் தேதி வரை 4 நாள்கள் விடுமுறை முடிந்து அலுவலக வேலை நாளான இன்று வேட்பாளர் பட்டியல் குறித்து கேட்கலாம் என மனுத்தாக்கல் செய்தவர்கள் முடிவெடுத்தனர். 

அதன்படி, வேட்புமனு  தாக்கல் செய்தவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்குத் திரண்டு வந்து பார்த்தபோது அலுவலகம் பூட்டிக் கிடந்துள்ளது.ஒருவேளை தாமதமாக அலுவலகம் திறப்பார்களோ என்ற எண்ணத்தில், அங்கேயே அத்தனை பேர்களும் காத்துக் கிடந்தார்கள். ஆனால், வெகுநேரமாகியும் அலுவலக ஊழியர்கள் யாரும் வரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த வேட்புமனுதாரர்களும் அவர்களது ஆதரவாளர்களும் தங்களுடைய காளை மாடுகளை வீட்டிலிருந்து இழுத்து வந்து பூட்டிக்கிடந்த  அலுவகலத்தின் முன்பு கட்டிப் போட்டுவிட்டு, அலுவலகம் முன்பு அமர்ந்து  போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். நேரம் ஆக..ஆக வெயில் தாக்கம் அதிகமாக இருக்கவே, உடனடியாக, நிழலுக்காக பெரிய சைஸ் படுதாவைக்கொண்டு தற்காலிக பந்தலும் அமைத்து முன்னைப் காட்டிலும் மிகத் தீவிரமாக கோஷங்களுடன் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் ஊராட்சி தலைவர் சந்தானம் கூறும்போது," நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்த அன்று `தேர்தலை முறைப்படி நடத்துவோம்' என்று தேர்தல் அலுவலர் எங்களுக்கு வாக்குக் கொடுத்தார். ஆனால், அதற்கான எந்த ஏற்பாடுகளும் இங்கு நடைபெறவில்லை. அதுகுறித்து நாங்கள் கேட்ட எந்த கேள்விக்கும் அதிகாரிகள் சரியான, தெளிவான பதிலைக் கூறவில்லை. நான்கு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு அலுவலகம் திறக்கும் என்று வந்த எங்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. அதனால்தான், எங்கள் கால்நடைகளைக் கட்டிப்போட்டு போராட்டத்தை நடத்துகிறோம். முறையாக தேர்தல் நடக்கும் வரை இப்போராட்டம் தொடரும்’’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!