கண்மாயில் கழிவுநீரைக் கலக்கும் அரசு..! சிவகங்கை மக்கள் வேதனை | Villagers complaint to Sivagangai collector

வெளியிடப்பட்ட நேரம்: 03:20 (03/04/2018)

கடைசி தொடர்பு:03:20 (03/04/2018)

கண்மாயில் கழிவுநீரைக் கலக்கும் அரசு..! சிவகங்கை மக்கள் வேதனை

கழிவு நீர்

மக்கள் பயன்படுத்தும் கண்மாயில் அரசாங்கமே கழிவுநீரைக் கலப்பதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் இளையான்குடி மக்கள் புகார் மனு அளித்துள்ளனர். 

கல்லூரணி மக்கள் ஆட்சியரிடம் புகார்

அரசாங்கமே கண்மாயில் கழிவு நீரை கொண்டு வந்து விடுவதால் ஒரு கிராமமே குடிக்க தண்ணீர் இன்றி தவித்துக் கொண்டிருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருக்கிறார்கள். அக்கிராம மக்களிடம் பேசிய போது, 'சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கல்லூரணி கிராமம் அமைந்துள்ளது.

இந்தக் கிராமத்தில் உள்ள கண்மாய் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல்  அப்படியே மேடு ஏறிப்போய் கிடக்கிறது. இந்த கண்மாய்க்கு தண்ணீர் வரத்து இல்லை. அதற்கு மாறாக மாணிக்கவாசகர் நகர், மல்லிப்பட்டிணம், இளையான்குடி ஆகிய மூன்று பேரூராட்சிகளின் கழிவு நீர் இந்த கண்மாய்க்குள் பாய்ச்சப்படுகிறது. இதனை எதிர்த்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் சாலையில் மறியல் செய்தோம். அந்த நேரத்தில் அதிகாரிகள் அடைத்து வைத்திருந்தார்கள். இந்த கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, குடிப்பதற்காக பயன்படுத்தி வரும் கிணற்று நீருக்குள் கழிவு நீர் கலந்து விட்டது.

வறட்சியான இந்த நேரத்தில் ஆடு, மாடுகள்  கண்மாய்க்குள் இறங்கி கழிவு நீரை குடிப்பதால் நோய் வந்து இறந்து போகிறது. கழிவு நீர் தேங்கி இருப்பதால் மர்ம காய்ச்சல் ஏற்படுகிறது. 'எங்கள் ஊர் சுடுகாட்டிற்கு கட்டிடம், போர்வெல்ஸ் எல்லாம் கட்டியதாக குறிப்பிட்டுள்ளனர். மகளிர் கட்டிடம் பாதியிலேயே கடந்த மூன்று ஆண்டுகளாக நிற்கின்றது. இதிலும் முறைகேடு நடந்திருக்கிறது. தாய் திட்டத்தில் போடப்பட்ட போர்வெல் அப்படியே கரண்ட் கனெக்சன் கொடுக்காமல் கிடக்கிறது. கழிவு நீர் தேங்கி இருக்கும் கண்மாய்க்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் சுமார் 25 லட்ச ரூபாய் செலவில் தூர்வாரப்பட்டதாக கணக்கு எழுதப்பட்டிருக்கிறது. எல்லா ஊர்களிலும் குளிப்பதற்கு தண்ணி தொட்டி கட்டப்பட்டிருக்கிறது. ஆனால் எங்கள் ஊரில் மட்டும் தண்ணீர் தொட்டி இதுவரைக்கும் கட்டப்படவில்லை' என்கிறார்கள்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க