``அக்காவுக்கு ஸ்டெர்லைட் புகையால் கருச்சிதைவு... தம்பி போராட்டக்களத்தில்!" - கவிஞர் சுகிர்தராணி | Tamil Writer, Poet Sukirtharani Shares her experience about Sterlite Protest

வெளியிடப்பட்ட நேரம்: 07:59 (03/04/2018)

கடைசி தொடர்பு:08:05 (03/04/2018)

``அக்காவுக்கு ஸ்டெர்லைட் புகையால் கருச்சிதைவு... தம்பி போராட்டக்களத்தில்!" - கவிஞர் சுகிர்தராணி

அங்க நாங்க இருந்தப்போ எங்களுக்குத் தொண்டைக் கமரல் ஏற்பட்டுச்சு. சுவாசிக்கறதுக்கு சிரமமா இருந்துச்சு

``அக்காவுக்கு ஸ்டெர்லைட் புகையால் கருச்சிதைவு...  தம்பி  போராட்டக்களத்தில்!

`விதிமுறைகளை மீறி நச்சு உலை

தூக்குமரத்தைக் கட்டிவைத்தான்

காற்றை நீரை மனித உயிரை

கொலைக்களமாய் மாற்றிவிட்டான்

அமைதியான போராட்டம் இது

எது வந்தாலும் தாங்குவோம்

நொடிப்பொழுதே நாங்களும்கூட

விதிமுறைகளை மீறுவோம்' -  என்.டி.ராஜ்குமார்

சுகிர்தராணி

தூத்துக்குடி மாவட்டம் அ.குமரெட்டியாபுரத்தில் உள்ள வேப்பமரத்தின் கீழ் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது இந்தப் பாடல். 50 நாள்களை எட்டியிருக்கும் அந்தக் கிராம மக்களின் ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு வலுசேர்க்கும்விதமாக, தமிழ்ப் படைப்பாளிகள் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு எழுத்தாளர்கள் போராட்டக் களத்தில் மக்களுடன் களம்கண்டனர். கவிஞர் சுகிர்தராணி, எழுத்தாளர் கோணங்கி, எழுத்தாளர் லட்சுமி மணிவண்ணன், எழுத்தாளர் சோ.தர்மன், கவிஞர் யவனிகா ஶ்ரீராம், கவிஞர் தேவதேவன், ஓவியர் புருஷோத்தமன், கடங்கநேரியான், அருணாச்சலம், ஜெனிபர் இவர்களோடு இன்னும் பல தமிழ்ப் படைப்பாளிகளும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டக்களம் சென்றனர்.

அன்றைய தினம் வேலைக்குச் சென்றால் மட்டுமே உணவு உண்ண முடியும் என்ற நிலையில் அங்கு போராடிக்கொண்டிருந்த மக்கள் அனைவரும் எளியவர்களே! எந்தத் தவறும் செய்யாமல் புற்றுநோய், கருச்சிதைவு போன்றவற்றால் அல்லல்பட்டுவரும் அந்த மக்களின் நிலை குறித்து, பேராட்டக் களத்துக்கு நேரில் சென்ற கவிஞர் சுகிர்தராணியிடம் பேசினோம்...

சுகிர்தராணி

``இந்தக் கிராமத்துக்குள்ள நுழையும்போதே போலீஸ்காரங்க எங்க எல்லாரையும் சோதனை பண்ணி, விவரங்கள் கேட்டுதான் அனுப்பினாங்க. குமரெட்டியாபுரம் கிராமத்துல இருக்கிற மக்கள் எல்லோருமே ஊரோட தொடக்கத்துல இருக்கிற ஒத்த வேப்பமரத்துக்குக் கீழதான் உக்காந்து  போராடுறாங்க. அவ்வளவு மக்களுக்கும் அந்தச் சின்ன வேப்பமர நிழல் போதாம, நிறையபேர் வெயில்ல போராட்டம் பண்ணிட்டிருக்காங்க. அவங்க பந்தல் போட்டுக்கக்கூட போலீஸ் அனுமதி கொடுக்கல. போராட்டத்தைக்கூட அரசு சொல்றபடிதான் செய்யணும்னு நினைக்குது நம்ம அரசு.  கிட்டத்தட்ட 15 நாளா ஸ்டெர்லைட் ஆலை செயல்பாடை ஏதோ ஆய்வு காரணமா நிப்பாட்டி வெச்சிருந்தாங்க.

அங்க நாங்க இருந்தப்போ எங்களுக்குத் தொண்டைக் கமரல் ஏற்பட்டுச்சு. சுவாசிக்க ரொம்ப சிரமப்பட்டோம். அந்த மக்கள்  எப்படி வாழ்ந்திருப்பாங்கனு நினைச்சுப்பாக்கவே முடியலை. ரொம்ப பேர் உடம்பு சரியில்லாம, வீட்டுவாசல்லயே படுத்துக்கிடக்குறாங்க. அவங்களுக்கு 'ஸ்டெர்லைட்' ஆலையிலயிருந்து மாத்திரையெல்லாம் குடுத்திருக்காங்க. ஆனா, அந்த மக்கள் அதை வேணாம்னு சொல்லிட்டாங்க. 50 நாளா அந்த மக்கள் வேளைக்குப் போகாம போராட்டக் களத்துலயே இருக்கிறது எவ்வளவு கஷ்டம்கிறதை நேர்ல பார்க்க முடிஞ்சது. எல்லாருக்கும் சேத்து ஒண்ணா சமைச்சு, வௌியூர்ல இருந்து யாராவது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்தாங்கனா அவங்களுக்கும் சாப்பாடு குடுத்துட்டு, அதுக்கப்புறம் அவங்க சாப்பிடுறாங்க. அந்தச் சுற்றுவட்டாரப் பகுதிகள்ல பஸ் ஸ்டாப், ரயில்வே ஸ்டேஷன் தொடங்கி மயானம் வரைக்கும் பல இடங்கள்ல ஸ்டெர்லைட் ஸ்பான்சர் இருக்கு. ஆனா, இதெல்லாம் பண்ணவேண்டிய எம்.எல்.ஏ., எம்.பி., மேயர் எல்லாம் என்ன பண்றாங்கனு தெரியலை. இவ்வளவு பாதிப்புகள் ஏற்படுத்தின `ஸ்டெர்லைட் ஆலை'ய மூடாம அதை விரிவுப்படுத்துறது அந்த மக்களுக்குச் செய்ற மாபெரும் துரோகம்.

அந்தப் போராட்டக் களத்துல அருண்குமார்னு சின்னப் பையன்  ஒருத்தன் அவ்வளவு உக்கிரத்தோடு போராடினான். அந்தப் பையன் போராட்டக்களத்துக்கு வந்ததைக் கேட்டு அதிர்ச்சியானேன். அவன் அக்கா இந்த நச்சுக் காற்றை சுவாசிச்சதால, அவருக்கு கருச்சிதைவு ஆகிருச்சு. அக்காவுக்கு ஏதோ உடம்புசரியில்லனு நினைச்சு அந்தப் பையன் போராட வந்திருக்கான். அவனுக்கு `கருக்கலைப்பு'ங்கிற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாது. அவன் களத்துல கொடுத்த சத்தம் இன்னும்கூட காதுல ஒலிக்குது.

கோயம்புத்தூர், சென்னை போன்ற மாவட்டங்கள்ல இருந்தும் நிறைய மாணவர் அமைப்புகள் போராட்டக் களத்துக்கு வந்திருந்தாங்க. இந்தக் கிராம மக்கள் போராட்டம் பண்றதைப் பார்த்துட்டு, பக்கத்து கிராம மக்களும் போராட்டம் பண்ண தொடங்கினாங்க. அந்த மக்களோட போராட்டம் வெற்றி பெறணும்.

படைப்பாளிகள், எப்பவுமே மக்களுக்கானவங்களா இருக்கணும்னுதான் நான் நினைப்பேன். படைப்போடு நிறுத்தாம மக்களுக்காக களத்துல இறங்கி செயல்படணும்னுதான் எப்பவும் நினைப்பேன். தமிழ்ப் படைப்பாளிகள் கூட்டமைப்பு சார்பா காவிரி உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் களத்துல இறங்கி குரல் கொடுப்போம்" என்றார் ஆதங்கத்துடன்.

எளியவர்களின் கண்ணீர், அரசையே வீழ்த்தும் வல்லமைகொண்டது என்பதை அரசு உணர வேண்டும். தனியார் தொழிற்சாலையின் வளர்ச்சிக்கு அப்பாவி மக்கள் பலிகடா ஆக்கப்படும் நிலை நிறுத்தப்பட வேண்டும். கருவில் இருக்கும் குழந்தைகள் பிறக்கும்போது  நச்சுக்காற்றும் நோய்மையும் அவர்களை இந்தப் பிரபஞ்சத்துக்கு வரவேற்காமல், நோயற்ற இயற்கை அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்