`இது ஸ்டெர்லைட்டுக்குத் துணைபோகும் நடவடிக்கை' - அரசுக்கு எதிராகப் பொங்கிய குமரெட்டியாபுரம் மக்கள் | kumarediyapuram Villagers protest against to borewall cleaning work

வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (03/04/2018)

கடைசி தொடர்பு:11:20 (03/04/2018)

`இது ஸ்டெர்லைட்டுக்குத் துணைபோகும் நடவடிக்கை' - அரசுக்கு எதிராகப் பொங்கிய குமரெட்டியாபுரம் மக்கள்

தூத்துக்குடி மாவட்டம், அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் உள்ள ஆழ்துளைக் குடிநீர் பைப்பை சுத்தம்செய்ய கிராம மக்கள்  எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  நிலத்தடிநீர் மாசுபட்டுள்ளதை அரசு அழிக்க முயல்வதாக கிராம மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, இன்று  51-வது நாளாகத் தொடர்ந்து அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் போராடி வருகின்றனர். இந்தக் கிராமத்தில் உள்ள ஆழ்துளைக் குடிநீர் பைப்பை சுத்தம்செய்வதற்காக நேற்று  வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளைக் கிராம மக்கள் முற்றுகையிட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும் ஊர்மக்கள் குடிநீர்க் குழாயைச் சுத்தம்செய்ய அனுமதிக்கவில்லை. இன்று அதிகாலை, மீண்டும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் குடிநீர்க் குழாயை அகற்றிவிட்டு, சுத்தம்செய்ய போர்வெல் அமைக்கும் தொழிலாளர்களுடன் வந்து ஊரின் நுழைவுப் பகுதியில் உள்ள குழாயை அகற்ற முற்பட்டனர். மீண்டும் கிராம மக்கள் முற்றுகையிட்டதால், அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பினர். போர்வெல் லாரியும் கிளம்பியது.

குமரெட்டியாபுரம் கிராமம்

இதுகுறித்து கிராம மக்களிடம் பேசினோம், "இந்த ஆலையால் நிலத்தடி நீர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.  மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எங்கள் கிராமத்திலுள்ள 6 குடிநீர்க் குழாய்த் தண்ணீரைப்  பரிசோதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், குடிநீர் போர்வெல்களையெல்லாம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து கழற்றிவிட்டு, அவற்றையெல்லாம் சுத்தப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். இதைச் சுத்தப்படுத்துவதன்மூலம், நச்சுக்கள் கலந்த கழிவுகள் வெளியேற்றபட்டுவிடும்.  இதை  நாங்கள் தடுத்து நிறுத்தியுள்ளோம். இது, முழுக்கமுழுக்க ஸ்டெர்லைட் ஆலைக்குத் துணைபோகும் நடவடிக்கைதான். இதுபோன்ற செயல்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மேலும், மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள்,  இந்த நீரைப் பரிசோதனைசெய்ய வேண்டும்" என்றார்கள்.

தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், "தூத்துக்குடியில் கோடையில் ஏற்படப்போகும் தண்ணீர்ப் பிரச்னையைச் சமாளிக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. குளங்கள் அனைத்தும் வற்றிவிட்டன. தாமிரபரணியில் தண்ணீரும் குறைந்துவிட்ட நிலையில், தற்போது நிலத்தடி நீரைப் பராமரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது மாவட்ட நிர்வாகம். இதன்படி, மாவட்டத்தில் உள்ள 12 பிளாக்குகளில், 250 கிராமங்களில் புதிய போர்கள் அமைக்கும் பணியும், பழைய போர்களில் பராமரிப்புப் பணிகளும் நடைபெற்றுவருகின்றன. அதன் அடிப்படையிலேயே இதுவும் நடைபெறுகிறது" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க