'நீ பற்ற வைத்த நெருப்பொன்று...' ஆரம்பமானது மத்திய அரசை முடக்கும் போராட்டம்! | we want cauvery management board, political parties of tamilnadu combinedly raise voices

வெளியிடப்பட்ட நேரம்: 10:44 (03/04/2018)

கடைசி தொடர்பு:11:34 (03/04/2018)

'நீ பற்ற வைத்த நெருப்பொன்று...' ஆரம்பமானது மத்திய அரசை முடக்கும் போராட்டம்!

'நீ பற்ற வைத்த நெருப்பொன்று...' ஆரம்பமானது மத்திய அரசை முடக்கும் போராட்டம்!

போராட்டம் அறிவிக்கும் காவிரி உரிமை மீட்புக் குழுவினர்

ச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும் 'காவிரி மேலாண்மை வாரியம்' அமைக்காமல் தமிழ்நாட்டுக்குப் பெரும் துரோகத்தை இழைத்துள்ளது மத்திய அரசு. "இந்த முடிவு தமிழகத்தின் நலனுக்கு எதிரானது. வருங்காலத்தில் விவசாயம் என்ற ஒன்றே இல்லாமல் போய்விடும். இதன் முக்கிய நோக்கம் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் மத்திய அரசு பல நாசக்கார திட்டங்களை அமல்படுத்தவிருக்கிறது. இந்தத் திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டுமானால் முதலில் இங்குள்ள விவசாயத்தை ஒழித்துக்கட்ட வேண்டும். இப்படியே விட்டால் நாளை தமிழ்நாடே பாலைவனப் பூமியாக மாறிவிடும்" என்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபடுவோர், அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் காவிரி டெல்டா பாசனப்பகுதிகளில் விவசாயத்தைக் காக்கும் பொருட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த சில தினங்களாக முக்கிய அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். "மத்திய அரசுக்கான தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்வதாக மட்டும் இந்தப் போராட்டம் இருக்கக்கூடாது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்தே தீர வேண்டும். அப்படியொரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்" என தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் முடிவு செய்திருப்பதுடன், தொடர் போராட்டங்களையும் அறிவித்துள்ளனர். 

போராட்டத்தில் திருமுருகன் காந்தி

தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், ஏப்ரல் 1-ம் தேதியன்று, 'காவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு வரி செலுத்தமாட்டோம்' என்று தெரிவித்து உளுந்தூர்பேட்டை அருகே நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். தொடர்ந்து, 2.4.2018 அன்று, மே 17 இயக்கத்தினர் மத்திய அரசு அலுவலகம் அமைந்துள்ள சாஸ்திரிபவன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, "கடந்த சில வருடங்களாக தமிழக மக்களின் வாழ்க்கையே போராட்டக்களமாக மாறிவிட்டது. ஹைட்ரோகார்பன், நீட் தேர்வு, ஸ்டெர்லைட் தொழிற்சாலை, நியூட்ரினோ ஆய்வகம் போன்ற மக்களைப் பாதிக்கக்கூடிய திட்டங்களுக்கு எதிராக, அமைதியான முறையில் பல நாள்கள் போராட்டம் செய்துவிட்டோம். ஆனால், தமிழக அரசுக்கு ஆதரவாக, மத்திய அரசு எந்தவொரு நிலைப்பாடையும் எடுக்கவில்லை. தற்போது காவிரி மேலாண்மை வாரியத்தையும் மத்திய அரசு அமைக்கவில்லை. இனி அமைதியான முறையில் போராட்டம் நடத்தினால் மத்திய அரசு நம்மை ஒரு பொருட்டாகவே மதிக்காது. அதனால், மத்திய அரசு நிறுவனங்களை முடக்குதல், மத்திய அரசுக்கு வரி செலுத்தாமல் இருப்பது போன்ற போராட்டங்களை முன்னெடுத்தால் மட்டுமே தமிழர்களின் எதிர்ப்பு குறித்து இந்திய அரசுக்குப் புரியும்" என மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும், பல்வேறு இயக்கங்களும், பொதுமக்களும் களத்தில் குதிக்க தயாராகிவிட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம்

"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெறும். அதுவும் மத்திய அரசை ஸ்தம்பிக்கச் செய்யும் வகையில் அந்தப் போராட்டங்கள் நடைபெற வேண்டும்" என தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளும் போராட்டத்துக்கான நாள்களைக் குறித்துவிட்டன. 

போராட்டத்தின் ஒருபகுதியாக நேற்று (2-4-2018 ) சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் 'காவிரி உரிமை மீட்புக் குழுவின் விரிவடைந்த ஆலோசனைக் கூட்டம்' என்ற பெயரில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. 

காவிரி போராட்டம்தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனரும், சட்டமன்ற உறுப்பினருமான தனியரசு, மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ-வுமான தமிமுன் அன்சாரி, இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (சோஷியல் டெமாகரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) தலைவர் தெஹ்லான் பாகவி உள்ளிட்டோரும், பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று தங்களின் கருத்துகளைத் தெரிவித்தனர். 

இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்வரை, தமிழகத்தில் தொடர்ச்சியான போராடடங்களை முன்னெடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட இயக்கங்கள் அனைத்தும் 'ஒத்துழையாமை இயக்கத்தை' தொடங்க வேண்டும்; தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள 45 சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் செலுத்தாமல் செல்ல வேண்டும்; சென்னை விமான நிலைய முற்றுகைப் போராட்டம்; மத்திய அரசு நிறுவனங்கள் முற்றுகைப் போராட்டம், ஜி.எஸ்.டி வரி கட்டாமல் புறக்கணிப்பது; வரும் 10-ம் தேதி நெய்வேலியில் நிலக்கரி சுரங்க முற்றுகைப் போராட்டம் நடத்துவது" போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் "காவிரி மேலாண்மை வாரியத்துக்காக எந்தவொரு கட்சியோ அல்லது அமைப்போ போராட்டம் செய்தாலும் காவிரி உரிமை மீட்புக்குழு ஆதரவு அளிக்கும்" என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஆலோசனைக் கூட்டம் பற்றி தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், "தமிழகத்தில் நாம் அறிவித்துள்ள போராட்டங்களை நடத்தினால்,மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்படும். காவிரிக்காக, இதுவரை நடத்திய போராட்டங்கள் தோல்வியில் முடிந்திருக்கலாம். ஆனால், இந்தமுறை நம் போராட்டம் வெற்றிபெற வேண்டும். உச்ச நீதிமன்றமோ அல்லது மத்திய அரசோ காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு உடனடியாக நல்லதொரு முடிவை எடுத்து அறிவிக்க வேண்டும். தமிழக இளைஞர்கள் ஐ.பி.எல். விளையாட்டைப் புறக்கணிக்க வேண்டும். நாம் எப்போது வேண்டுமானாலும் விளையாடிக் கொள்ளலாம். ஆனால், நமது உரிமையை விட்டுகொடுத்தோம் என்றால் வருங்காலத்தில் அழிவு நிச்சயம். அதனால் விளையாட்டைப் புறக்கணித்து, இளைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் ஜாதி, மதம் கடந்து போராட முன்வர வேண்டும். மத்திய அரசை ஸ்தம்பிக்கச் செய்து காவிரியில் தமிழகத்துக்கான உரிமையை மீட்டெடுப்போம்" என அழைப்பு விடுத்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்