எலுமிச்சை விளைச்சல் அமோகம்! புளியங்குடிக்குப் படையெடுக்கும் கேரள வியாபாரிகள்! | Farmers are happy with the lemon price hike

வெளியிடப்பட்ட நேரம்: 11:26 (03/04/2018)

கடைசி தொடர்பு:11:26 (03/04/2018)

எலுமிச்சை விளைச்சல் அமோகம்! புளியங்குடிக்குப் படையெடுக்கும் கேரள வியாபாரிகள்!

நெல்லை மாவட்டத்தில் எலுமிச்சை விளைச்சல் அமோகமாக உள்ள நிலையில், அதற்கு தமிழகம் மற்றும் கேரளாவில் நல்ல விலை கிடைத்துவருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

எலுமிச்சை விளைச்சல்- கேரளா வியாபாரிகள்

நெல்லை மாவட்டம் புளியங்குடி, சிவகிரி, சங்கரன்கோவில், திருவேங்கடம், குருக்கள்பட்டி, இருமன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் எலுமிச்சை அதிகமாகப் பயிரிடப்படுகிறது. கோடைக்காலத்தில், தமிழகத்தில் மட்டுமில்லாமல், கேரளாவிலும் எலுமிச்சைக்கு அதிக வரவேற்பு இருப்பது வழக்கம். கடந்த ஆண்டு போதிய மழை இல்லாத நிலையில், எலுமிச்சை விவசாயிகள், பணம் கொடுத்து டேங்க்கர் லாரிகள்மூலம் தண்ணீர் கொண்டுவந்து எலுமிச்சையைக் காப்பாற்றினார்கள். 

ஆனாலும், கடந்த ஆண்டு போதிய வருவாய் கிடைக்காமல் விவசாயிகள் மிகுந்த சிரமத்தைச் சந்தித்தனர். விளைச்சல் அதிகம் இருந்ததால், ஒரு கிலோ எலுமிச்சை 20 ரூபாய் வரை மட்டுமே விலை போனது. ஆனால், இந்த வருடம் நிலைமை மாறியிருக்கிறது. அதிக மழை இருந்ததால், எலுமிச்சை நல்ல தரத்துடன் விளைந்துள்ளது. அதனால், வரவேற்பு அதிகம் இருப்பதால், கிலோவுக்கு 120 ரூபாய் வரை விற்பனையாகிறது. 

கோடை வெயில் வாட்டிவதைக்கத் தொடங்கியிருப்பதால், கேரளாவில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் புளியங்குடி எலுமிச்சை மார்க்கெட்டை நோக்கி வரத் தொடங்கியிருக்கிறார்கள். அத்துடன், சங்கரன்கோவில் மார்க்கெட்டுக்கும் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தினமும் 30 முதல் 50 டன் வரையிலும் எலுமிச்சை வரத்து உள்ளது. எலுமிச்சை அதிக விலைக்கு விற்பனையாவதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் குளிர்ந்துள்ளனர்.  


[X] Close

[X] Close