`ஸ்கீம்' குறித்த கேள்விக்கு மழுப்பிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி! | Admk Hunger strike protest Coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 12:37 (03/04/2018)

கடைசி தொடர்பு:12:44 (03/04/2018)

`ஸ்கீம்' குறித்த கேள்விக்கு மழுப்பிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

`ஸ்கீம்’ என்பதுக்கு மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளதே என்ற கேள்விக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளிக்கவில்லை.

வேலுமணி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, அ.தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.


அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, "மத்திய அரசு உடனடியாகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஓய மாட்டோம். தொடர் போராட்டம் நடைபெறும். அ.தி.மு.க-வினர் உணர்வுபூர்வமாகப் போராடிவருகின்றனர். ஆனால் தி.மு.க, அரசியலுக்காகப் போராடிவருகிறது. காவிரி மேலாண்மை  வாரியம் அமைக்காமல் இவ்வளவு பிரச்னைக்கும் தி.மு.க-தான் காரணம். தி.மு.க வானளாவிய அதிகாரத்தில் இருந்தபோதும் வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது, அரசியலுக்காகப் போராடுகின்றனர். சாதனை படைக்கும் வகையில் அ.தி.மு.க சார்பாக நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு கூட்டம் வந்துள்ளது. அடுத்தகட்ட முடிவுகள்குறித்து கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் முடிவு எடுப்பார்கள்'' என்றார்.

 பேட்டியின்போது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் உள்ள 'ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், அந்தக் கேள்விக்கு அமைச்சர் வேலுமணி பதிலளிக்காமல் மழுப்பிவிட்டார்.