வெளியிடப்பட்ட நேரம்: 12:26 (03/04/2018)

கடைசி தொடர்பு:12:26 (03/04/2018)

திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்ட டி.டி.வி.தினகரன்! அய்யாக்கண்ணு கைது!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக திருச்சியில் இன்று பல்வேறு இடங்களில் காவிரிக்காக போராட்டம் நடந்து வருகிறது.
 
திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்ட தினகரன்! அய்யாக்கண்ணு கைது!
 
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை அருகில் அ.தி.மு.க சார்பில் மாவட்டச் செயலாளரும் எம்.பியுமான குமார் தலைமையில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்துகொள்ளும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் காவிரி விவகாரத்துக்காக திருச்சி மாவட்டத்தில் 90,000 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் 100 கோடிக்கும் அதிகமான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தை நம்பிதான் வணிகர்கள் இருக்கிறார்கள். அதனால் விவசாயிகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு தருவோம் என்று திருச்சி மாவட்ட வணிகர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை என்றால் எங்கள் போராட்டமானது தீவிரமடையும் என அறிவித்துள்ளனர்.
 
மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி காலை 9.30 மணிக்கு தி.மு.க தலைமையிலான அனைத்துக் கட்சி சார்பில், மத்திய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 
கடையடைப்பு
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு முடிவடைந்தவுடன் அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்டியிருந்தால் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்க முடியும் எனக் குற்றம்சாட்டி திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டு விமானங்களை தரையிறக்க விடமாட்டோம் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் தலைமையில் குவிந்தனர். இந்தப் போராட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்துகொள்வதால் 2000க்கும் மேற்பட்டோர் திரண்டனர். பின்னர், விமான நிலையத்தை டி.டி.வி.தினகரன், அய்யாக்கண்ணு, பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டவர்கள் முற்றுகையிட்டனர். அவர்களை  போலீஸார் கைது செய்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க