வெளியிடப்பட்ட நேரம்: 14:03 (03/04/2018)

கடைசி தொடர்பு:14:03 (03/04/2018)

`கலெக்டரின் கார் வருவதற்கு இடைஞ்சல்' - நடைபாதைக் கடைகளை அகற்றிய அதிகாரிகள்!

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு வெளியே சாலையோரத்தில் செயல்பட்டு வந்த கடைகளால் ஏற்பட்ட நெரிசலில் ஆட்சியரின் கார் சிக்கிக் கொண்டதால் அங்கிருந்த ஆக்கிரமிப்புக் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அவசரமாக அகற்றினார்கள்.

ஆக்கிரமிப்பு அகற்றம்

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தைச் சுற்றிலும் தள்ளுவண்டிகளில் சிறிய கடைகள் செயல்பட்டு வந்தன. குளிர்பானங்கள், கரும்புச்சாறு, கம்பு மற்றும் கேள்வரகு கூழ் உள்ளிட்டவற்றை அந்தக் கடைகளில் விற்பனை செய்து வந்தனர். ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமைகளில் மாவட்ட ஆட்சியரிம் மனு அளிப்பதற்காக சுமார் 1000 பேர் வரை வருவார்கள். அவர்கள் அந்தக் கடைகளில் பொருள்களை வாங்குவார்கள். பிற நாள்களிலும் அந்தக் கடைகள் செயல்பட்டு வந்தன. 

இந்த நிலையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று மதியம் வெளியே செல்லும்போது நுழைவு வாயிலின் அருகே மக்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. அந்தப் பகுதியில் இருந்த கடையின் முன்பாக சிலர் நின்றுகொண்டிருந்தனர். அதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த ஆட்சியர், மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து ஆக்கிரமிப்பில் செயல்பட்டு வரும் அந்தக் கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

உடனடியாக அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள், அந்தக் கடைகளை நடத்தியவர்களை அங்கிருந்து விரட்டி விட்டு, கடைகளை அடித்து உடைத்து அதில் இருந்த பொருள்களை வாரி அள்ளி குப்பை லாரியில் வீசியுள்ளனர். அத்துடன், கடைகளையும் மாநகராட்சி லாரியில் ஏற்றி தூக்கிச் சென்றுவிட்டனர். கரும்புச்சாறு கடைகளில் இருந்த மோட்டார்களை உடைத்ததைப் பார்த்த கடைக்காரர்கள் கதறி அழுதபடியே, அங்கு வந்திருந்த மாநகராட்சி அதிகாரியின் காலில் விழுந்து கதறியும் மனம் இறங்காமல் பொருள்களை உடைத்து சூறையாடியுள்ளனர். அதனால் கடைகளின் உரிமையாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

இது பற்றிப் பேசிய கடையின் உரிமையாளர்கள், ‘’இந்தக் கடைகளை வைத்திருக்க போலீஸாருக்கு தினமும் மாமுல் கொடுத்து வந்தோம். அத்துடன், மாநகராட்சியில் இருந்து வந்து அவ்வப்போது பணம் கேட்பார்கள். உணவுப் பொருள் விற்பனைக்காக மாநகராட்சி உணவுப் பொருள் கட்டுப்பாட்டு அதிகாரியிடம் 1000 ரூபாய் கொடுத்து சான்றிதழ் வாங்கி வைத்திருக்கிறோம். அந்த சான்றிதழைக் கொடுத்தபோது, அந்த அதிகாரிக்கு நாங்கள் ஆக்கிரமிப்பில் கடை வைத்திருப்பது தெரியாதா?

கரும்புச்சாறு கடை

ஏற்கெனவே நெல்லை மாநகரில் திரும்பிய இடம் எல்லாம் ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் ஆக்கிரமிப்பு இடங்களில் டீக்கடை வைத்து தினமும் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். அது எதுவும் ஆட்சியரின் கண்ணுக்குத் தெரியவில்லையா? ஆளுங்கட்சிப் பிரமுகர்களின் அடாவடிகளைத் தடுக்க முடியாதவர்களுக்கு அப்பாவிகளான நாங்கள் தினமும் சொற்ப வருமானம் கிடைக்கும் இந்தத் தொழிலில் ஈடுபடுவதைத் தடுக்க எப்படி மனம் வந்தது? 

மாநகராட்சி ஊழியர்களிடம் கெஞ்சியும் தள்ளுவண்டியில் வைத்திருக்கும் கடைகளை அப்புறப்படுத்திக் கொண்டு செல்ல அனுமதிக்காமல் அவற்றை சம்மட்டியால் அடித்து நொறுக்கியது வேதனை அளிக்கிறது’’ என்று கண்ணீர் விட்டார்கள். இத்தகைய அத்துமீறலில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாக உள்ளது.