அ.தி.மு.க போராட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை வம்பிழுத்த அமைச்சர்! | Minister Pandiyarajan participated ADMK's hunger strike in Nagercoil

வெளியிடப்பட்ட நேரம்: 14:57 (03/04/2018)

கடைசி தொடர்பு:15:29 (03/04/2018)

அ.தி.மு.க போராட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை வம்பிழுத்த அமைச்சர்!

காவிரி விவகாரத்தில் உண்மையான உணர்வு இருக்குமானால் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் ஏன் உண்ணாவிரதம் இருக்கவில்லை என நாகர்கோவிலில் அ.தி.மு.க. சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக அமைச்சர் மாஃபா பாப்டியராஜன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை வம்புக்கு இழுத்தார்.

காவிரி விவகாரத்தில் உண்மையான உணர்வு இருக்குமானால் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ-களும் ஏன் உண்ணாவிரதம் இருக்கவில்லை என நாகர்கோவிலில் அ.தி.மு.க. சார்பில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கேள்வி எழுப்பினார்.

போராட்டத்தில் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் நாகர்கோவிலில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டார். போராட்டத்தில் அவர் பேசுகையில், ``காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒருங்கிணைப்புக் குழு ஆகிய இரு அமைப்புகளையும் வெகு விரைவில் அமைத்திட மத்திய அரசுக்கு அழுத்தம் தர உண்ணாநிலை நோன்பு இருக்கிறோம். காவிரி பிரச்னை வெறும் தண்ணீர் பிரச்னையோ, விவசாயிகள் பிரச்னையோ அல்லது ஆறு டெல்டா மாவட்டங்களின் பிரச்னையோ அல்ல. அதனால்தான் தமிழகம், புதுச்சேரியில் 34 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும்.

கர்நாடகாவில் நடைபெறவுள்ள தேர்தலைக் காரணம் காட்டி 3 மாதம் காலஅவகாசம் கேட்கிறார்கள். கர்நாடகத் தேர்தலைவிட உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது மிகவும் முக்கியம். எங்களைப் பொறுத்தவரை வாழ்வாதார பிரச்னையைத் தேர்தலுடன் ஒப்பிடக் கூடாது. காங்கிரஸ், தி.மு.க. மற்றும் பா.ஜ.க. வெற்றிபெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் அந்தப் போராட்டத்தில் மக்கள் அதிகமாகக் கலந்துகொண்டுள்ளனர். நாட்டின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டிய காலம் இது. அகில இந்திய கட்சிகள் இரு மாநிலங்களுக்கிடையே பிரச்னை ஏற்படும் போது சுமுகமாக தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்.பி- க்கள் ராஜினாமா செய்வது வலிமையான காரணமாக அமையாது. நாடாளுமன்றத்தில் வலிமையை இழப்பது சரியில்லை. எங்கள் வலிமையால் 19 நாள்களாக நாடாளுமன்றத்தை முடக்கி வைத்துள்ளோம்.

நாகர்கோவிலில் அ.தி.மு.க. சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக அமைச்சர் மாஃபா பாப்டியராஜன்

குமரி மாவட்டத்தில் சில கட்சிகள் சாதியை நம்பியும் சில கட்சிகள் மதத்தை நம்பியும் அரசியல் செய்கின்றன. ஆனால், மனித நேயம் என்ற சொல்லை வைத்து அரசியல் செய்யும் ஒரே கட்சி அ.தி.மு.க. மட்டும்தான். குமரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளையும் அ.தி.மு.க. இழந்தது. ஒரு காலகட்டத்தில் இங்கு அ.தி.மு.க. முன்னிலை கட்சியாக இருந்தது அந்த நிலையை மீண்டும் கொண்டுவர ஈ.பி.எஸ். ஓ.பி.எஸ். இருவரும் செயல்படுகிறார்கள். மீண்டும், குமரி மாவட்டம் அ.தி.மு.கவின் எஃகு கோட்டையாக மாற இறைவன் அருள் தரட்டும். குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கூடுறவுச் சங்கங்களிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும் நிலையில் இருக்கிறது. ஓர் அதிகாரியை 6 எம்.எல்.ஏ-க்கள் வந்து மிரட்டுகிறார்கள் என்றால், அதன்மூலம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சம் வெளிப்படுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் தமிழகத்துக்கு பா.ஜ.க. அரசு விலை போய்விட்டது எனக் காங்கிரஸ் கூறிவிடும் என நினைத்து இதில் முயற்சி எடுக்க மத்திய அரசு மறுக்கிறது. அதேபோல, பா.ஜ.க., தங்களைக் குற்றம்சாட்டும் என நினைத்து காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் காங்கிரஸும் தயங்குகிறது. இந்தக் கருத்தை 2 தேசியக் கட்சிகளும் வேர்பிடித்துள்ள குமரி மாவட்டத்தில் கூறுவது சரியாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

காங்கிரஸ் கட்சி போலித்தனமாகச் செயல்படுகிறது. சட்டசபையில் அதிகமாகப் பேசுவது குமரி மாவட்டத்தின் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்தான். உண்மையான உணர்வு இருக்குமானால், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களும் ஏன் உண்ணாவிரதம் இருக்கவில்லை?. தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க. மட்டும்தான்" என்றார்.