`காவிரி போராட்டத்துக்கு ஆதரவு!’ - கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலைகள் மூடல் #WeWantCMB | Kovilpatti Match industries are closed to show their support for Constituting CMB

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (03/04/2018)

கடைசி தொடர்பு:15:20 (03/04/2018)

`காவிரி போராட்டத்துக்கு ஆதரவு!’ - கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலைகள் மூடல் #WeWantCMB

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் 300 பகுதிநேர  இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் மற்றும் அதனுடன் இணைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

தீப்பெட்டி ஆலைகள் மூடல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் சாலைமறியல், ரயில் மறியல் எனப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று அ.தி.மு.க-வினர்  உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இத்துடன் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கடையடைப்புப் போராட்டமும்  நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியறுத்தியும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 300 பகுதி இயந்திர தீப்பெட்டித் தொழிற்சாலைகள் மற்றும் அதனுடன் இணைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜாப் வொர்க் தீப்பெட்டி ஆலைகள் இன்று (3.4.2018) ஒருநாள் மூடப்பட்டுள்ளன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர் சேதுரத்தினம், "மத்திய அரசு, தீப்பெட்டி தொழிலுக்கு 18 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டபோது, எங்களுக்கு ஆதரவாக விவசாயிகளும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், டெல்டா மாவட்ட விவசாயிகள் பலன் பெறுவார்கள். நெல் உற்பத்தியும் அதிகரிக்கும். பல மாவட்டங்களுக்கு குடிநீர் தேவையும் பூர்த்தியாகும்.

காவிரி நமது உரிமை. அதைவிட்டுக் கொடுக்கக் கூடாது. எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தியும்  விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கோவில்பட்டியில் 300 பகுதி இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் மற்றும் அதனுடன் இணைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜாப் வொர்க் தீப்பெட்டி ஆலைகள் இன்று ஒருநாள் மூடப்பட்டுள்ளன. மேலும், அவற்றில் பணிபுரியும் 2 லட்சம் தொழிலாளர்களும் இன்று பணிக்கு வரமாட்டார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மத்திய அரசுக்கு மாநில அரசுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க