வெளியிடப்பட்ட நேரம்: 15:31 (03/04/2018)

கடைசி தொடர்பு:15:31 (03/04/2018)

`வேளாண்துறையில் நமக்கு சிறப்பான இடம்' - இயக்குநர் பெருமிதம்

வேளாண்துறை இயக்குநர் தட்சணாமூர்த்தி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் மாணவர்களும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். இந்தச் சூழ்நிலையிலும், தமிழகம் 100 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியத்தை உற்பத்தி செய்து தேசிய அளவில் தமிழகம் விருது பெற்றுள்ள செய்தி விவசாயிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

"100 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்து தேசிய அளவில் தமிழகம் விருது பெற்றுள்ளது. இதை ஊக்குவிக்கும்விதமாக விவசாயத் திட்டங்கள் வழங்குவதில் உற்பத்தியாளர்கள் குழு மற்றும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்" எனக் கரூர் மாவட்டத்தில் கள ஆய்வுப் பணிகள் மேற்கொண்ட வேளாண்துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,  "நடைபெற்று வரும் தண்ணீர் பற்றாக்குறை காலத்தில் தொடர்ந்து விவசாயம் செய்வதற்கு ஏதுவாக அரசு பல்வேறு தொழில்நுட்ப யுக்திகளையும் வேளாண்கருவிகள் இடுபொருள்களையும் வழங்கி வருகிறது. மேலும், ஒருங்கிணைந்த விவசாயம் செய்தால் நல்ல லாபகரமான தொழிலாக விவசாயத்தை மேற்கொள்ள இயலும் என்ற அடிப்படையில், 20 நபர்கள் கொண்ட விவசாய ஆர்வலர் குழு அமைக்கப்பட்டு அதில் 5 குழுக்களை இணைத்து 100 நபர்களைக் கொண்ட விவசாய உற்பத்தியாளர் குழு அமைக்கப்படுகிறது. இவர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் ஆண்டுக்கு வேளாண் கருவிகள் வழங்கப்பட்டு, விவசாயத்தை
ஊக்குவித்து வருகின்றனர்.

வேளாண் கருவிகள்

இக்குழுக்களை 1,000 நபர்கள் கொண்ட குழுக்களாக இணைத்து விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் என்று அமைக்கப்பட்டு ரூ.15 லட்சம் மதிப்பில் வேளாண் கருவிகளும் இடுபொருள்களும் வழங்கப்படுகிறது. இந்த நிறுவனத்தை நிர்வகிப்பதற்காக முதன்மை செயல் அலுவலர் ஒருவர் மத்திய அரசின் மூலம் நியமிக்கப்பட்டு, அரசே ஊதியம் வழங்குகிறது. இந்த நிறுவனத்தில் 7 முதல் 10 வரை குழுக்களை இணைத்து ஏற்றுமதி செய்யக்கூடிய மதிப்புக்கூட்டு விவசாயப் பொருள்களை உற்பத்தி செய்திடவும் ஏற்றுமதி செய்திடவும் அரசு நிதியுதவி வழங்குகிறது. அரசின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்களில் இதுபோன்ற குழுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விவசாயத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு தண்ணீர் இல்லாத இச்சூழ்நிலையிலும் சொட்டுநீர் பாசனம் மிக நன்மை தரக்கூடிய ஒன்றாக உள்ளது.

சொட்டுநீர் பாசனம், தடுப்பணைகள், பண்ணைக் குட்டைகள், மழை நீர் சேகரிக்கும் இடங்கள் என இதுதொடர்பான திட்டங்களை மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. இதில் கரூர் மாவட்டத்தில் 311 இடங்களில் மழைநீர் சேகரிக்கும் தளம் அமைக்கப்பட்டுள்ளது. பண்ணைக் குட்டைகள் அமைப்பதற்கும் தடுப்பணைகள் அமைப்பதற்கும் தகுந்த இடங்களைத் தேர்வு செய்ய விவசாயிகளிடமிருந்து ஆலோசனை கேட்கப்படும். தமிழகத்தில் 2016-17ம் ஆண்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக ரூ.4,227.98 கோடி மதிப்பில் 7,62,772 பயனாளிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.