வெளியிடப்பட்ட நேரம்: 14:53 (03/04/2018)

கடைசி தொடர்பு:18:33 (03/04/2018)

கார்னோகைட் பாறை... 51 டன் உணர்கருவி... நியூட்ரினோ ஆய்வகத்தில் என்ன நடக்கும்?

கார்னோகைட் பாறை... 51 டன் உணர்கருவி... நியூட்ரினோ ஆய்வகத்தில் என்ன நடக்கும்?

நியூட்ரினோ. அறிவியல் அறிஞர்களுக்கு எட்டாக்கனியாக இருக்கும் ஒரு நுண்ணிய துகள். மர்மங்கள் நிறைந்த நியூட்ரினோவை பற்றிய ரகசியங்கள் உடைக்கப்பட்டால் பிரபஞ்சம் தோன்றியது எப்படி என்ற முடிச்சு அவிழ்க்கப்படும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை. இதனாலேயே பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து நியூட்ரினோ பற்றிய ஆய்வுகளை முடிக்கிவிட்டிருக்கின்றன உலக நாடுகள். அந்நாடுகளின் வரிசையில் இந்தியாவும் ஒன்று. கடந்த 1965 ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலார் தங்கச் சுரங்கத்தில் நடத்தப்பட்ட நியூட்ரினோ ஆய்வானது, சுரங்கச் சூழல், பண பற்றாக்குறை, தொழில்நுட்ப வளர்ச்சியின்மை போன்ற காரணங்களால் கைவிடப்பட்டது. மீண்டும் நியூட்ரினோ ஆய்வை எப்போது நாம் தொடங்குவோம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த இந்திய விஞ்ஞானிகள், ஆய்வகம் அமைப்பதற்கான சரியான இடத்தை தேடினர். இந்தியா முழுவதும் பயணம் செய்த அவர்கள், இறுதியாக தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள சிறிய கிராமமான பொட்டிபுரத்தில் அமைந்துள்ள அம்பரப்பர் மலையைத் தேர்வு செய்தனர். ஆய்வகம் அமைக்கும் பணி, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் எனக் கருதிய சுற்றுச்சூழல் அமைப்புகள், நீதிமன்றத்தை நாடி ஆய்வகம் அமைக்க தடையாணை பெற்றனர். முடங்கியது நியூட்ரினோ திட்டம்.

நியூட்ரினோ

அம்பரப்பர் மலையில் அப்படி என்ன ஸ்பெஷல்?

`கார்னோகைட்’ (Charnockite) எனும் பாறை வகையைச் சேர்ந்தது அம்பரப்பர் மலை. இந்தியா, இலங்கை, மடகாஸ்கர், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பரவலாகக் காணப்படும் இந்த வகை பாறையானது பல ஆயிரம் ஆண்டுகளாக கடும் வெப்பத்தாலும், கண்ட தட்டுக்களின் அழுத்தத்தாலும் உருவானது. இதன் வயது 2.5 பில்லியன் ஆண்டுகள். இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சிமலை மற்றும் கிழக்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாகக் காணப்படும் கார்னோகைட் பாறைகளின் வயது 550 மில்லியன் ஆண்டுகள். வளிமண்டலத்தில் சுற்றித்திரியும் எண்ணற்ற துகள்களிலிருந்து நியூட்ரினோ துகள்களை வடிகட்டும் வேலையை அம்பரப்பர் மலை செய்யும் என விஞ்ஞானிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. கோலார் தங்க வயலில் நியூட்ரினோ துகள்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டபோது காஸ்மிக் கதிர்கள் உட்பட பல துகள்களின் தலையீட்டினால், நியூட்ரினோ பற்றிய சரியான தரவுகளைச் சேகரிக்க முடியாமல் போனதாகவும் சொல்லப்படுகிறது. அதனால்தான் இந்த முறை, தேவையற்ற துகள்களை வடிகட்டும் இயற்கை வடிகட்டியாக அம்பரப்பர் மலையை விஞ்ஞானிகள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

ஆய்வுக்கூடம் எப்படி இருக்கும்?

மலையின் அடிவாரத்திலிருந்து 2கிலோ மீட்டர் மலையைக் குடைந்து, மலையின் நடுப்பகுதியில் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும். இரு பகுதியைக் கொண்ட ஆய்வுக்கூடத்தில் ஒரு பகுதியில், 51 ஆயிரம் டன் இரும்பால் ஆன நியூட்ரினோ உணர் கருவி (Nutrino Detector) இருக்கும். மற்றொரு பகுதியில் உணர் கருவியிலிருந்து கிடைக்கும் தரவுகளை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் உள்ள கட்டுப்பாட்டு அறை இருக்கும். வளிமண்டலத்திலிருந்து வரும் நியூட்ரினோ கதிர்கள், பொருத்தப்பட்டிருக்கும் உணர் கருவியின் வழியே கடந்து செல்லும் போது, துகள் பற்றிய தரவுகள் சேகரிக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்படும். அங்கே அந்தத் தரவுகள் ஆய்வு செய்யப்படும்.

உணர்கருவி

உலகின் மாபெரும் காந்தமும், உணர் கருவியும் :

அம்பரப்பர் மலையில் வைக்கப்படும் நியூட்ரினோ உணர் கருவியானது `அயர்ன் கலோரிமீட்டர்’ (Iron Calorimeter) எனப்படும். இந்த உணர் கருவியானது  இரும்புத்தகடுகளால் அடுக்கப்பட்ட ஓர் அமைப்பு. அதன் மொத்த எடை 51 ஆயிரம் டன்.! ஒவ்வோர் இரும்புத் தகடுகளைச் சுற்றி மேலும் கீழும் கண்ணாடியால் அடைக்கப்பட்டு அதன் இடையில் குளிர்சாதனப்பெட்டிக்குப் பயன்படுத்தும் வாயு செலுத்தப்படும். அதன் மொத்த அமைப்பும் சர்க்யூட் செய்யப்பட்டு கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும். சர்க்யூட் செய்யப்படும் போது இரும்புத் தகடுகளானது மின் காந்தமாக மாற்றம் பெரும். பின்னர், இதுவே உலகின் மிகப்பெரிய காந்தமாகக் கருதப்படும்.! இது மின்காந்தம் என்பதால் புவிகாந்தப்புலத்திற்கு எந்தவித சிக்கல்களையும் ஏற்படுத்தாது.! உணர் கருவியைக் கடக்கும் நியூட்ரினோ துகளின் ஆற்றல், வேகம் உட்பட அனைத்துத் தரவுகளும் சேகரிக்கப்படும். அவை கணினி மூலம் பதிவு செய்யப்பட்டு ஆய்வு செய்யப்படும். ஆய்வு மையத்தில் ஆயுள்காலம் 120 வருடம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உணர்கருவி

அறிவியல் சுற்றுலாவும், நியூட்ரினோ ஆய்வுக்கூடமும் :

``அதிகபட்சம் ஐந்து வருடங்கள் நீடிக்கும் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கும் பணிகள் முடிந்த பிறகு அறிவியல் அறிஞர்கள், ஆய்வு மாணவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், இங்கே அறிவியல் சுற்றுலா வரலாம். இரண்டு கிலோமீட்டர் குகையைக் கடந்துவந்து ,உலத்தரம் வாய்ந்த நியூட்ரினோ ஆய்வுமையத்தில் நடக்கும் ஆய்வுப்பணிகள் பற்றி நேரடியாகப் பார்ப்பது எங்குமே கிடைக்காத ஒன்று. பொதுமக்களும் அனுமதிக்கப்படுவார்கள். இதனால் நம் இளம் தலைமுறையினரின் அறிவியலின் மீதான ஆர்வமும், ஆராய்ச்சிகளும் அதிகரிக்கும்.’’ என்கிறார் நியூட்ரினோ கூட்டு விஞ்ஞானி ஸ்டீபன் ராஜ்குமார்.

படங்கள் & தரவுகள் உதவி : INO (Indian Based Nutrino Observatory) & Rajya Sabha TV


டிரெண்டிங் @ விகடன்