வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (03/04/2018)

கடைசி தொடர்பு:16:20 (03/04/2018)

காவிரி விவகாரத்தில் தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்!

காவிரி மேலாண்மை விவகாரத்தில் தமிழகத்தைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராகப் புதுச்சேரி அரசும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிகவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் திர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி வாரியம் அமைக்கப்படும் என்று தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் காத்திருந்தன. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் கெடு முடிவடைந்த தருணத்தில் தீர்ப்பில் இருந்த `ஸ்கீம்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியவில்லை என்று விளக்கம் கேட்டது மத்திய அரசு. அதையடுத்து `ஸ்கீம்’ என்றால் காவிரி மேலாண்மை வாரியம் கிடையாது என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நேற்று விளக்கமளித்தார். அதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசுமீது கடந்த மாதம் 31-ம் தேதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது.

தமிழக அரசைத் தொடர்ந்து மத்திய அரசுமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடருவோம் என்று புதுச்சேரி அரசும் அறிவித்தது. புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்க முடியாது. அதனால் மத்திய அரசுமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கான கோப்பைத் தயார் செய்து ஆளுநரின் ஒப்புதலுக்காக அரசு அனுப்பியது. ஆனால், `யூனியன் பிரதேச சட்டங்கள், விதி எண் 55-ன்படி மத்திய அரசுக்கு எதிராக வழக்கு போடுவது எப்படி சாத்தியம்?’ என்ற கேள்வியோடு அந்தக் கோப்பை ஆளுநர் திருப்பி அனுப்பிவிட்டார் என்று தகவல் வெளியானது. இதற்கிடையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார் ஆளுநர் கிரண்பேடி. அதையடுத்து காவிரி மேலாண்மை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு மதிக்கவில்லை என்று சுட்டிக்காட்டி, புதுச்சேரி அரசு சார்பில் அதன் கொறடா அனந்தராமன் இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க