வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (03/04/2018)

கடைசி தொடர்பு:16:00 (03/04/2018)

`வாழை இலையில் மண் சோறு!’ - காவிரிக்காக விவசாயிகள் நடத்திய நூதனப் போராட்டம் #WeWantCMB

காவிரி மேலாண்மை வரியம் அமைக்க வலியுறுத்தி மண் சோறு சாப்பிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வாழை இலையில் மண்ணைக்கொட்டி  அதை சோறாகச் சாப்பிட்டு, நூதன முறையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அவர்களைப் பார்த்த பொதுமக்கள் கண்கள் கலங்கியதோடு, `இப்படி ஒரு நிலைமை எப்பவும் வரக் கூடாது’ என நெஞ்சு பதைபதைக்கக் கூறினர்.

விவசாயிகள் நடத்திய போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும் அதை நிறைவேற்றாமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசின்மீது போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கடும் விமர்சனங்களை வைக்கிறார்கள்.

இந்தநிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதற்காக 50-க்கும் மேற்பட்டவர்கள் கையில் கரும்பு மற்றும் கறுப்புக்கொடி பிடித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் வாழை இலையில் மண்ணைக் கொட்டி அதைச் சோறாகச் சாப்பிடத் தொடங்கினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் தமிழகத்துக்குத் திறந்துவிட வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு முறையாகத் திறந்துவிடவில்லை. காவிரி நீர் இல்லாத தமிழகத்தின் நிலை இதுதான் என்று குறிப்பால் உணர்த்தும் வகையில் வாழை இலையில் மண் சோறு சாப்பிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறுகையில், ''ஏற்கெனவே பல ஆண்டுகளாகக் காவிரியில் ஒழுங்காகத் தண்ணீர் வராமல் விவசாயிகள் பல துயரங்களைச் சந்தித்து வருகிறார்கள். இந்தநிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் சொல்ல முடியாத துன்பத்துக்கு ஆளாவார்கள் விவசாயிகள். மேலும், தமிழகத்தின் நெற்களஞ்சியம் எனப் பெயரெடுத்த தஞ்சை மாவட்டத்தில்கூட எல்லோரும் அரிசி சோற்றுக்குப் பதிலாக மண்ணைச் சாப்பிடும் நிலை உருவாகும். அந்த நிலை வராமல் தடுக்க காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்'' என்றனர்.

விவசாயிகள் நடத்திய நூதனப் போராட்டம்

பின்னர், வாழை இலையில் மண்ணை வைத்து சாப்பிடவும் செய்தனர். அவர்களைக் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இந்த நூதனப் போராட்டத்தைப் பார்த்த பொதுமக்கள் சிலர் நெஞ்சு பதைபதைக்க மனம் கலங்கியதோடு, 'இப்படி ஒரு நிலைமை மட்டும் எப்போதும் யாருக்கும் வந்துவிடக் கூடாது' என மனம் கலங்கினர். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க