வெளியிடப்பட்ட நேரம்: 16:41 (03/04/2018)

கடைசி தொடர்பு:17:32 (03/04/2018)

`உக்காந்தா காசு கொடுப்போம்'னு சொன்னாங்க' - போட்டுடைத்த அ.தி.மு.க உண்ணாவிரதத்துக்கு வந்தவர்கள்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. கோவையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

 அதிமுக உண்ணாவிரதம்

உண்ணாவிரதப் போராட்டம் என்றாலும், மாநாடு போல தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவை மாவட்டம் முழுவதும் இருந்து, தனியார் வாகனங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். சிலர் 300 ரூபாய் பணம், மாலை சாப்பாடு என்று சொல்லி அழைத்து வந்ததாகக் கூறினர். வேறு சிலர், "அமெளன்டே சொல்லல... சாயங்காலம் வரைக்கும் உக்காந்தா காசு கொடுப்போம்'னு சொன்னாங்க... சாயங்காலம் போறப்பதான் தெரியும்..." என்றனர். ஆள் காட்ட வேண்டும் என்பதற்காக மனநலம் குன்றியவர், பார்வையற்ற பெண், வட இந்தியர்கள், முதியவர்கள், குழந்தைகள் அழைத்து வரப்பட்டிருந்தனர். இதில், பலருக்கு தாங்கள் எந்த நிகழ்வுக்கு வந்துள்ளோம் என்பதே தெரியவில்லை.

கூட்டம் அதிகம் வந்ததால், அமருவதற்கு இடம் பத்தவில்லை. இதனால், சாலை மற்றும் மேம்பாலத்தின்கீழே மக்கள் அமர்ந்தனர். மதியம் 1 மணிக்குப் பிறகு, உண்ணாவிரதப் போராட்டக் களத்தில் சற்றே கூட்டம் குறைந்தது. பின்னர், அந்தக் கூட்டம் அருகில் இருந்த டாஸ்மாக் கடை மற்றும் ஹோட்டல்களுக்குச் சென்றது. சிலர், பார்சல் வாங்கிச் சென்று உண்ணாவிரதப் பந்தலுக்குப் பின்புறம் உணவு சாப்பிட்டனர். நடப்பது கட்சி நிகழ்வு என்றாலும், போலீஸ் கமிஷனர் பெரியய்யா உண்ணாவிரதப் போராட்டம் நடந்த இடத்திலேயே இருந்து, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்புப் பணிகளைக் கண்காணித்து வந்தார். உண்ணாவிரதத்துக்கு வந்தவர்களிடம், வலுக்கட்டாயமாக 'நமது அம்மா' நாளிதழ் திணிக்கப்பட்டது. போராட்டத்தில் பேசியவர்கள் பலரும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகழைத்தான் அதிகம் பாடினர். காவிரி பற்றி மிகவும் குறைவாகவே பேசினர்.