வெளியிடப்பட்ட நேரம்: 15:49 (03/04/2018)

கடைசி தொடர்பு:19:27 (05/04/2018)

சென்னை கடற்கரைகள் இப்போது எப்படி இருக்கின்றன?

சென்னை கடற்கரைகள் இப்போது எப்படி இருக்கின்றன?

மெரினா

'காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்க்கான போராட்டம் தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் போராட்டம் செய்துவருகிறார்கள். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் எழுச்சி தற்போது நிலவுவதால் அனைத்து மக்களின் பார்வையும் மெரினாவை நோக்கித் திரும்பியுள்ளது. மெரினாவில் ஒன்றுகூடினால் அரசையே கவனிக்கச் செய்யலாம் என்பதை மக்கள் உறுதியாக நம்புகிறார்கள். ஏற்கெனவே ஒரு மாபெரும் வெற்றியை பெற்று தந்த போரட்டக்களமல்லவா அது!. அதனால்தான் ஆளும் அ.தி.மு.க அரசும் மெரினாவைப் பொறுத்தவரை முன்னெச்சரிக்கையுடனே இருக்கிறது. போராட்டம் செய்வதற்கு மெரினாவில் மக்கள் கூடினால் எப்படியும் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்பதால் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு மெரினாவில் மக்கள் ஒன்றுகூடாமல் இருப்பதில் அதிக கவனம் செலுத்துகிறது அரசு. 

பெசன்ட் நகர் பீச்

அதையும் மீறி கடந்த மார்ச் 31 ம் தேதி இளைஞர்கள் சிலர் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக மெரினாவில் போராடினார்கள். உடனடியாக போலீசாரால் கைதும் செய்யப்பட்டார்கள். அன்று இரவே மற்றுமொரு இளைஞர் குழு பெசன்ட் நகர் பீச்சில் கைது செய்யப்பட்டார்கள். அதனால், மெரீனா பீச் மற்றும் பெசன்ட் நகர் பீச் போலீசாரின் கட்டுபாட்டுக்குள் வந்தது. பகலில் ஐந்து பேருக்கு மேல் சென்றால் விசாரிப்பதில் தொடங்கி இரவு கேட் போட்டு மூடும் அளவுக்கு மெரீனா மற்றும் பெசன்ட் நகர் பீச்சுகளில் ஏகப்பட்ட கட்டுப்பாடு. இந்தநிலையில் இரவில் பீச்சில் கண்காணிப்பு எப்படி இருக்கிறது என்பதை அறிய நேற்றிரவு(03-04-2018) மெரீனா மற்றும் பெசன்ட் நகர் பீச்சுக்கு ரவுண்ட்ஸ் சென்றோம். 

பெசன்ட் நகர் பீச்

முதலில் பெசன்ட் நகர் பீச்சுக்கு செல்லும் போது மணி இரவு 11.30. பீச் சாலையில் குவிந்திருந்த காவலர்களை தவிர அந்த சாலைகளில் வேறு யாருமே இல்லை. பீச்சுக்கு செல்லும் நான்கு வழிகளும் சில நூறு மீட்டருக்கு முன்பே இரும்பு தடுப்புகளால் மூன்று அடுக்கு தடுப்பு போடப்பட்டிருந்தது. ஒவ்வொரு தடுப்புகளிலும் ஒரு சப் இன்ஸ்பெக்டரின் தலைமையில் சுமார் 10 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர். மேலும் பாதுகாப்பு பணியில் சில இன்ஸ்பெக்டர்களும் ஈடுப்பட்டிருந்தனர். ”பீச்சை ஃபோட்டோ எடுக்கணும் உள்ளே விடுங்க!” என்றோம். "சார் சொன்னா கேளுங்க உள்ள போகக்கூடாது. நீங்க பீச்சுக்கு போன விஷயம் மேல தெரிஞ்சிதுன்னா எங்க வேலை போயிரும். ப்ளீஸ் இடத்த காலிப்பண்ணுங்க. வேணும்னா தடுப்புகளுக்கு வெளியே நின்னு ஃபோட்டோ எடுத்துக்கோங்க" என்றனர். ”பெசன்ட் நகர் பீச்ல எதுக்கு சார் இவ்ளோ பாதுகாப்பு?”, என நாம் கேட்க "போன சனிக்கிழமை சில பேர் வந்து நைட் நேரத்துல போராட்டம் பண்ணிட்டாங்க. அவங்கள இங்கிருந்து அப்புறப்படுத்துறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சி. அதனால தான் பெசன்ட் நகர் பீச்லயும் பாதுகாப்பை பலப்படுத்த சொல்லிட்டாங்க" என்றனர்.

பெசன்ட் நகர் பீச்

அடுத்து பெசன்ட் நகர் ஏரியாவைச் சுற்றி நாம் ரவுண்ட் அடிக்க, ஆங்காங்கே போலீசார்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அந்தக் காவலைத் தாண்டி அந்த இரவு நேரத்தில் பீச்சுக்குள் அல்ல... பீச் சாலைக்குள் செல்வது கூட மிகக் கடினமான காரியம், எனவே மெரினா பீச்சை நோக்கி பைக்கைத் திருப்பினோம். ஜல்லிக்கட்டுப் போராட்டக்களம் அல்லவா? சொல்லவே வேண்டாம்...காவலர்கள் நூற்றுக்கணக்கில் குவித்துவைக்கப்பட்டிருந்தனர். ஐந்து நிமிடத்துக்கு ஒரு ரோந்து வாகனம் காமராஜர் சாலையில் சென்றுக்கொண்டிருந்தது. சாலையின் இருபுறங்களிலும் எண்ணற்ற போலீஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சாலையில் மட்டுமல்ல கடற்கரை மணலிலும் ரோந்து வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் அங்கு சென்றவர்கள், நின்றவர்கள் என யாரையும் காவலர்கள் விட்டு வைக்கவில்லை. தீவிர விசாரிப்புக்கு பிறகு உடனடியாக அவர்கள் அங்கிருந்து அனுப்பிவைக்கப்பட்டார்கள். 

மெரினா

போராட்டம் செய்வதற்காக பொதுமக்கள் எக்காரணத்தைக் கொண்டும் பீச்சுக்குள் நுழைந்தவிடக்கூடாது என்பதில் அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது. ஒரு போராட்டத்தின் வீரியத்தை கண்கூடாகப் பார்த்தவர்கள்... பயம் இருக்கத்தானே செய்யும்!
 


டிரெண்டிங் @ விகடன்