`என் அம்மாவை எப்படி அடிக்கலாம்?' - தி.நகர் போலீஸ் களேபரத்தின் நிஜப் பின்னணி

வீடியோ

பரபரப்பான சென்னை தி.நகரில் கம்பத்தோடு சேர்த்து வைத்து இளைஞர் ஒருவரைப் போக்குவரத்து போலீஸார் தாக்கும் வீடியோ அனைவரையும் பதற வைக்கிறது. இந்தச் சம்பவத்தில் நடந்தது என்ன என்ற முழு வீடியோ வெளியாகியுள்ளது.  

சென்னை தி.நகருக்கு அம்மாவையும் சகோதரியையும் நேற்று மாலை அழைத்துக்கொண்டு டூவீலரில் வந்த பிரகாஷ் என்ற இளைஞருடன்தான் போக்குவரத்து போலீஸார் மல்லுக்கட்டியுள்ளனர். பிரகாஷ்மீது ஹெல்மெட் அணியவில்லை. டூவீலரில் மூன்று பேர் பயணித்ததுதான் போக்குவரத்து போலீஸார் வைக்கும் குற்றச்சாட்டு. போலீஸார் விதித்த அபராதத்தை பிரகாஷ் செலுத்தவில்லை என்றும் போலீஸ் தரப்பில் குற்றம் சுமத்தப்படுகிறது. தொடர்ந்து, அங்குள்ள கம்பத்தோடு பிரகாஷை பிடித்து வைத்திருக்கும் போலீஸார், அவரை தாக்குவதைப் போன்ற வீடியோ வெளியானது. அதுகுறித்து போலீஸாரிடம் கேட்டால், இந்தச் சம்பவத்தில் சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ ஒரு பகுதிதான் என்றும் முழு வீடியோவை பார்த்தால் நடந்தது என்ன என்று தெரியவரும் என்றும் போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து சோர்ஸ் மூலம் தி.நகர் முழு வீடியோவை நாம் வாங்கினோம். அதில், போலீஸாருக்கும் இளைஞர் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கும் நடந்த முழு தகவல் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

வீடியோவில், பிரகாஷ் மற்றும் அவரின் அம்மா சங்கீதாவை போக்குவரத்து போலீஸார் இழுத்துக்கொண்டு சாலை ஓரத்துக்கு அழைத்து வருகின்றனர். அடுத்து, பிரகாஷை போலீஸ்காரர் ஒருவர் பிடித்துவைத்துள்ளார். அவரிடம் வாக்குவாதம் செய்யும் சங்கீதா, மகன் பிரகாஷை விடுவிக்கப் போராடுகிறார். அப்போது, திடீரென போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் சங்கீதாவைப் பிடித்துத் தள்ளுகிறார். இதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுகிறார். உடனே அவரைப் பிடிக்க பிரகாஷின் தங்கை முயற்சி செய்கிறார். இதைப்பார்த்த பிரகாஷ், அதிரடியில் இறங்குகிறார். போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். தொடர்ந்து அது கைகலப்பாக மாறுகிறது. இவையனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

போலீஸார் எடுத்த வீடியோவில், பிரகாஷ், தகராறு செய்யும் காட்சிகள் இடம்பிடித்துள்ளன. அப்போது, பிரகாஷிடம் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அபராதம் செலுத்தும்படி போலீஸ்காரர் ஒருவர் தெரிவிக்கிறார். அதற்கு, பிரகாஷ், போலீஸாரிடம் என் குடும்பத்தை டூவீலரில் அழைத்து வந்ததை எப்படி தவறு என்று சொல்லலாம் எனக் கேட்கிறார். அவரை ஆட்டோவில் செல்லும்படி போலீஸ்காரர் சொல்கிறார். தொடர்ந்து பிரகாஷும் போலீஸாரை தன்னுடைய செல்போனில் வீடியோ எடுக்கிறார். இவ்வாறு போட்டிப் போட்டு இருதரப்பும் வீடியோ எடுத்துள்ளது. இந்த வீடியோக்கள் அனைத்தும் போலீஸ் உயரதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர்கள் ஒவ்வொன்றாக ஆய்வு செய்துவருகின்றனர். இதற்கிடையில் பிரகாஷின் அம்மா சங்கீதாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர், சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!