உண்ணாவிரதத்தில் மத்திய அரசுக்கு எதிராகப் பொங்கிய பொன்னையன்!

பொன்னையன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். சேலம் கலெக்டர் அலுவலகத்தின் எதிரே முன்னாள் அமைச்சர் பொன்னையன் தலைமையில் சேலம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடாசலம், சக்திவேல், மனோன்மணி, சாந்தி மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமி, கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் உட்பட சுமார் 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்னையன், ''காவிரி நதிநீர் பிரச்னையில் 1967-ல் இருந்து மைய அரசும் கர்நாடக அரசும் தமிழகத்தைப் பேச்சுவார்த்தை என்று கூறி தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்று எல்லோருக்கும் தெரியும். கர்நாடகாவில் காவிரி பாசன பரப்பு 5 லட்சம் ஏக்கராக இருந்தது. தற்போது 45 லட்சம் ஏக்கராக மாறி இருக்கிறது.1924-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தையும் 1974-ல் புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தையும், நடுவர் மன்ற தீர்ப்பையும், இறுதியாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் மீறி கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் ஓரளவுக்கு தமிழகத்துக்கு சாதகமான தீர்ப்பு வந்தும், அதை மத்திய அரசும் கர்நாடக அரசும் காலில் போட்டு மிதிக்கின்றன.

கர்நாடகாவுக்கு எப்போதும் துணைபோகும் பி.ஜே.பி, காங்கிரஸ் அரசுகள் தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு இந்தியாவில் ஒரு பகுதி தமிழகம் இருக்கிறது என்று கருதாமலும் ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்தும், உலக நாடுகள் அவமதிக்கும் வகையில் மத்தியில் பி.ஜே.பி, காங்கிரஸ் அரசுகள் நடந்துகொள்கின்றன. இதைக் கண்டித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆணைக்கிணங்க அமைதியான முறையில் உண்ணாவிரதம் நடந்து வருகிறது'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!