`அ.தி.மு.க-வினரின் மனுக்கள் மட்டுமே ஏற்கப்படுகிறது' - கொந்தளிக்கும் உறுப்பினர்கள்! | Clash between ADMK and DMK members in Poombukar over Co-Operative Elections

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (03/04/2018)

கடைசி தொடர்பு:17:40 (03/04/2018)

`அ.தி.மு.க-வினரின் மனுக்கள் மட்டுமே ஏற்கப்படுகிறது' - கொந்தளிக்கும் உறுப்பினர்கள்!

`அ.தி.மு.க-வினரின் மனுக்கள் மட்டுமே ஏற்கப்படுகிறது' - கொந்தளிக்கும் உறுப்பினர்கள்!

நாகை மாவட்டம், பூம்புகாரில் கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு அ.தி.மு.க-வினரின் மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டதால் தி.மு.க உறுப்பினர்கள் மற்றும் அ.தி.மு.க உறுப்பினர்களுக்கு இடையே கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு தமிழகம் முழுவதும் நிர்வாக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தேர்தலுக்கு பூம்புகார் தொகுதியில் அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க ஆகிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க வேட்பாளர்களின் மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டதால் அதைக் கண்டித்து தி.மு.க உறுப்பினர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் தி.மு.க மற்றும் அ.தி.மு.க உறுப்பினர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து அப்பகுதியில் போலீஸார் விரைந்து வந்து கலவரத்தில் ஈடுபட்ட உறுப்பினர்களைக் கைது செய்து அருகில் இருந்த மண்டபத்தில் சிறை வைத்தனர். பின்பு பூம்புகார் தொகுதி கட்சித் தலைவர்கள், கட்சி உறுப்பினர்கள் சிறை வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் காரணமாகச் சுமுகமான முடிவு எடுக்கப்பட்டு பின்பு கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதேபோல், நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தி.மு.க உறுப்பினர்களின் மனுக்கள் ஏற்கப்படததால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்திலும் சாலை மறியலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.  

இது பற்றி தி.மு.க உறுப்பினர்களிடம் கேட்டபோது, ``தேர்தல் அதிகாரிகள் தி.மு.க-வினர் தாக்கல் செய்யும் மனுக்களை ஏற்க மறுக்கின்றனர். ஒருவேளை மனுக்களை வாங்கிக் கொண்டாலும் அதற்கு தர வேண்டிய ஒப்புகைசீட்டை தருவதில்லை. இதனால் தேர்தல் வேட்பாளர் இறுதிப் பெயர் பட்டியலில் தி.மு.க வேட்பாளர்களின் பெயர் இடம்பெறவில்லை. இந்தக் கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடக்கிறது. இதை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம்" என்றனர்.


[X] Close

[X] Close