காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்வரை போராட்டம் - பொங்கிய தி.மு.க

திமுக போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சேலம் மத்திய மாவட்ட தி.மு.க சார்பாக, சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதில் 200-க்கும் மேற்பட்ட தி.மு.க-வினர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகக் கோஷங்கள் போட்டார்கள்.

சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், ''உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரக் காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தியும் மத்திய பா.ஜ.க. அரசு கர்நாடகாவில் தேர்தலை மனதில் கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழர்களை ஏமாற்றி வருகிறார்கள்.

மத்திய பா.ஜ.க அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்காமல் ஆதரவு கொடுத்து வருவது வெட்கக் கேடான விஷயம். தற்போது தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக மக்கள் போராட்டக் களத்தில் குதித்திருக்கிறார்கள். எங்களுடைய போராட்டத்துக்கு பொதுமக்களும் மகளிரும் இளைஞர்களும், மாணவ மாணவிகளும் தானாகவே வந்து எங்களுடைய போராட்டத்தில் கலந்துகொள்கிறார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாங்கள் தொடர் போராட்டம் நடத்துவோம். தமிழகத்தின் உயிர் நீராக இருக்கும் காவிரி பங்கீட்டுப் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு  வழங்கியும் மத்திய அரசு அரசியல் செய்து வருவது தமிழர்களை வஞ்சிக்கும் செயல். தொடந்து மத்திய அரசு தமிழர் விரோதப் போக்கை கடைப்பிடித்து வருவது வேதனையளிக்கிறது'' என்றார்.

திமுக போராட்டம்

திருவள்ளூர்

திருவள்ளூரில் திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் தலைமையில் திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது மத்திய, மாநில அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.  அதன்  பின்னர் திருப்பதி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் செய்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் போலீஸார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றி மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அதேபோல பூந்தமல்லி கும்மிடிப்பூண்டி ஊத்துக்கோட்டை பகுதிகளிலும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!