வெளியிடப்பட்ட நேரம்: 18:01 (03/04/2018)

கடைசி தொடர்பு:18:01 (03/04/2018)

சாப்பாடு பொட்டலத்துடன் ஒதுங்கிய அ.தி.மு.க-வினர்! - இது புதுக்கோட்டை உண்ணாவிரத ருசிகரம்

புதுக்கோட்டை நகரில் இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அ.தி.மு.க தொண்டர்கள் பிற்பகலுக்குப் பிறகு சாப்பிடுவதற்குச் சென்றுவிட்டதால், பந்தல் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடியது.

சாப்பாடு பொட்டம்- உண்ணாவிரதத்துக்கு வந்த அதிமுகவினர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி அ.தி.மு.க-வினர் தமிழகம் தழுவிய அளவில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்துவருகிறது. அந்தவகையில், புதுக்கோட்டை நகரில் நீதிமன்றம் அருகில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் இன்று காலை 8.10 மணிக்கு அ.தி.மு.க-வினர் உண்ணாவிரதப் போராட்டம்  தொடங்கியது. மிக அமைதியாக, உணர்ச்சிவசப்படாத மென்மையான வார்த்தைகளில் மத்திய அரசை விமர்சித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்துக்கொண்டிருந்தார் அமைச்சர். மாவட்டங்களின் மற்ற பகுதிகளான அறந்தாங்கி, விராலிமலை, ஆலங்குடி, பொன்னமராவதி, கீரனூர், திருமயம் ஆகிய ஊர்களிலிருந்து ர.ர-க்களை அந்தந்தப் பகுதி பொறுப்பாளர்களைக் கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் வந்து குவிக்கும்படி, அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரத்துக்கு டாடா ஏ.சி-க்களிலும் வேன்களிலும் வந்து கூட்டம் காட்டிக்கொண்டிருந்தார்கள். இன்று ஹோட்டல் சங்கம், மருந்துக்கடை உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்டவர்கள் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி புதுக்கோட்டை நகரில் பெரும்பாலான ஹோட்டல்கள் அடைக்கப்பட்டிருந்தன.

ஆனால், சொல்லி வைத்தாற்போல் உண்ணாவிரதம் பந்தல் அமைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகில் ஹோட்டல்கள் ஒன்றிரண்டு அரைகுறையாக திறந்திருந்தன. அங்கே லெமன் சாதம், தயிர்சாதம் போன்றவைத் தயாராகிக்கொண்டிருந்தன. உண்ணாவிரதம் நடந்தப் பகுதியே பழைய பேருந்துநிலையம் ஏரியா என்பதாலும் அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குக் குறைவான தூரத்தில் புதிய பேருந்து நிலையம் இருப்பதாலும் வெளியூர் பயணிகள் வசதிக்காக வெரைட்டி சாதம் செய்து விற்பனை செய்வதாக ஹோட்டல் உரிமையாளர்களால் அக்கறையாகச் சொல்லப்பட்டது. ஆனால், மதிய நேரத்துக்குப் பிறகுதான் உண்மை தெரிந்தது. பந்தல் அமைக்கப்பட்டிருந்த பகுதியில் வெயில் கொளுத்த, 'ப்பா, என்னா வெயிலு' என்றபடியே கூறிக்கொண்டு நிழலுக்கு ஒதுங்குவதாகக் சொல்லிக்கொண்டே, ஒவ்வொரு குழுவாகப் புறப்பட்டு ஹோட்டலுக்குச் சென்றுவிட்டார்கள்.

உள்ளூர் ர.ர-க்கள் வைராக்கியமாகப் பந்தலில் அமர்ந்துவிட்டார்கள். வெளியூரிலிருந்து வந்திருந்த அ.தி.மு.க-வினர் மட்டுமே அடையாளம் காட்டப்பட்ட ஹோட்டல்களுக்குச் சென்று பட்டை சாதம் பொட்டலத்தை வாங்கிக்கொண்டு ஆங்காங்கே ஒதுங்கிவிட்டார்கள். அந்தச் சமயத்தில் பந்தலில் கூட்டம் குறைந்திருந்தது. அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர் வைரமுத்து, நகரச் செயலாளர் பாஸ்கர் ஆகிய பொறுப்பாளர்களும் நிர்வாகிகள் செல்லத்துரை, ஜாபர் அலி உள்ளிட்டவர்கள் மட்டுமே அங்கே இங்கே நகராமல் அமர்ந்திருந்தார்கள். அவ்வப்போது ஊடகங்களுக்கு லைவ் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார் அமைச்சர். உண்ணாவிரதம் முடிவுறும் நேரத்தில் பழையபடி பந்தல் நிரம்பி வழிந்தது.