`உடம்பு சரியில்ல... அதான் உண்ணாவிரதத்துக்கு வரலை!’ - ஆப்சென்ட்டான அ.தி.மு.க எம்.எல்.ஏ

திருப்பூரில் அ.தி.மு.க-வினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ குணசேகரன் கலந்துகொள்ளவில்லை.

அ.தி.மு.க. உண்ணாவிரதம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் விவசாய அமைப்புகளும் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். சாலை மறியல், ரயில் மறியல், உண்ணாவிரதம், கடையடைப்பு எனக் காவிரி விவகாரம் தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்திருக்கும் அ.தி.மு.க-வும் தங்கள் பங்குக்கு உண்ணாவிரப் போராட்டம் நடத்த முடிவு செய்தது. அதனடிப்படையில் இன்றைய தினம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க சார்பாக காலை முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரதத்தில் அப்பகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எனத் திரளானோர் கலந்துகொண்டுள்ளனர்.

எம்.எல்.ஏ. குணசேகரன்

அந்த வகையில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக நடந்த அ.தி.மு.க-வின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில், திருப்பூர் வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ விஜயகுமார், பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ நடராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருக்க, திருப்பூர் தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ குணசேகரன் மட்டும் கலந்துகொள்ளவில்லை. 

`மாவட்டத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கும் எம்.எல்.ஏ குணசேகரனுக்கும் சமீபகாலமாகக் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது. அமைச்சருக்கு உரிய மரியாதையை எம்.எல்.ஏ குணசேகரன் வழங்குவதில்லை. தன்னுடைய விருப்பத்துக்கு ஏற்றவாறு அரசியல் செய்துகொண்டு இருக்கிறார்’ என்று அமைச்சரின் தரப்பினர் எம்.எல்.ஏ மீது புகார் கூறுகிறார்கள். `எந்தப் பிரச்னையோ இருந்துட்டு போகட்டும், காவிரி பிரச்னைக்காக உண்ணாவிரதம் இருக்கும்போதுகூட, இப்படி உட்கட்சி அரசியல் பண்ணணுமா’ என்று நொந்துகொள்கிறார்கள் கட்சித் தொண்டர்கள்.

உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ளாதது குறித்து விளக்கம் கேட்க எம்.எல்.ஏ குணசேகரனை தொடர்புகொண்டோம், "எனக்கு பைபாஸ் ஆப்ரேஷன் நடந்து சில மாதங்கள்தான் ஆகுது. மாத்திரை மருந்துகள் எல்லாம் சரியான நேரத்துக்கு சாப்பிடணும். நேற்றைக்கு முன்தினம் அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு விழாவின்போதுகூட சேரில் உட்காரும்போது தவறி விழுந்து அடிபட்டுவிட்டது. சரி. இன்றைக்கு உண்ணாவிரதம் தொடங்கும்போது சிறிதுநேரம் சென்று இருந்துவிட்டு வரலாம் என்றுதான் யோசித்தேன். ஆனால், உடல்நிலை ஒத்துழைக்கவில்லையே’’ என்று முடித்துக்கொண்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!