காவிரிக்காக மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்திய மயிலாடுதுறை வணிகர்கள்! #WeWantCMB

human chain

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, மயிலாடுதுறை வணிகர் சங்கத்தினர் கடைகளை அடைத்து, மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினார்கள்.  

மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்திய வணிகர்கள்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் வணிகர் சங்கத் தலைவர் செந்தில்வேலன் தலைமையில் இன்று மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒருநாள் கடையடைப்பு செய்தார்கள். ஒவ்வொரு கடையிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பை உணர்த்தும் வகையில் கறுப்புக்கொடி கட்டப்பட்டிருந்தது.  

அதன் பின், மயிலாடுதுறை மேம்பாலத்திலிருந்து காவிரி துலாக்கட்டம் வரையில் சாலையின் இருபுறங்களிலும் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. இதில் டெல்டா விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம் கலந்துகொண்டார்.  `அமைத்திடு... அமைத்திடு... காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு’ என்ற போராட்டக் குழுவினரின் கோஷம் விண்ணைப் பிளந்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் தர வேண்டும் என்றும் போராட்டக் குழுவினர் கோரிக்கை விடுத்தனர். வணிகர்கள், விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.  சுமார் 2 கி.மீ தொலைவுக்கும் அதிகமாகச் சாலையின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, கரம் கோத்து தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!