வெளியிடப்பட்ட நேரம்: 18:47 (03/04/2018)

கடைசி தொடர்பு:18:47 (03/04/2018)

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் பொதுக்கூட்டம்! - திருச்சியில் களைகட்டும் ஏற்பாடுகள்

திருச்சி ஜி.கார்னர் மைதானத்தில் நாளை நடைபெறும் மக்கள் நீதி மய்யம் கட்சிப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள நடிகர் கமல்ஹாசன் சென்னையிலிருந்து கிளம்பினார்.

திருச்சி ஜி.கார்னர் மைதானத்தில் நாளை நடைபெறும் மக்கள் நீதி மய்யம் கட்சிப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள நடிகர் கமல்ஹாசன் சென்னையிலிருந்து கிளம்பினார்.

கமல்நடிகர் கமல்ஹாசன் மதுரையில் கடந்த மாதம் 24-ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மேலும், மதுரை மாநாட்டில் மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி திருச்சியில் நடைபெறும் என அறிவித்தார். அதன்படி நாளை நடைபெறும் மக்கள் நீதி மய்யம் கட்சியின்
பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மக்கள் நீதி மய்யத்தின் திருச்சி மாவட்டச் செயலாளர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். இதற்காக திருச்சியில் முக்கிய இடங்களில் பிரம்மாண்ட சுவர் விளம்பரங்களை எழுதியுள்ளனர்.

பொதுக்கூட்ட ஏற்பாடுகளை மக்கள் நீதி மய்யத்தின் மாநிலச் செயலாளர் தங்கவேல் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் திருச்சியில் முகாமிட்டு நடத்தி வருகின்றனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்னையிலிருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார். இடையே ரயில் நிலையங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் சில நாள்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டது.  

இதே திருச்சி ஜி-கார்னர் மைதானத்தில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பி.ஜே.பி., த.மா.கா உள்ளிட்ட கட்சிகள் பிரமாண்டமாகக் கூட்டம் நடத்தியுள்ளன. எனவே, இந்த மைதானத்தை சென்டிமென்டாக நினைக்கும் மக்கள் நீதி மய்யத்தினர், மற்றக் கட்சிகள் கூட்டத்தை விட பிரமாண்ட அளவில் கூட்டத்தை கூட்ட வேண்டும் என நினைக்கிறார்களாம். அதற்கான ஏற்பாடுகளில் நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மக்கள் நீதி மய்யம்

இந்தக் கூட்டத்துக்காக அனுமதி கேட்டு ரயில்வே நிர்வாகத்திடம் மனு கொடுக்கப்பட்டது. கடந்த வாரம் புனித வெள்ளி உள்ளிட்ட அரசு தொடர் விடுமுறை காரணமாக நேற்று காலையில்தான் முறையாக அனுமதி கிடைத்தது. அதனால் பொதுக்கூட்டத்துக்கான பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. இந்நிலையில் திருச்சியில் இன்று முதல் ஏப்ரல் 18- ம் தேதி வரை பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் உள்ளிட்டவை நடத்த தடை விதித்து திருச்சி மாநகரக் காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால், கமல் ரசிகர்களிடையே பரபரப்பு நிலவியது. இந்நிலையில் காவல்துறை இது வழக்கமான உத்தரவுதான், ஆனால் திருச்சியில் நாளை கமல் பொதுக்கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னரே அனுமதி பெற்றதால் கமல் பொதுக்கூட்டத்துக்குத் தடை இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. ஒருபுறம் காவிரிக்கான போராட்டங்களால் திருச்சி பரபரப்பாக உள்ள நிலையில் நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசனின் பேச்சு பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க