`எங்களை எப்படி வீடியோ எடுக்கலாம்?’ தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரைத் தாக்கிய அ.தி.மு.க. தொண்டர்கள்

கோவையில் அ.தி.மு.கவினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அருகிலுள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் மது அருந்தினர். அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஜெயா டி.வி ஒளிப்பதிவாளரைத் தங்களை வீடியோ எடுக்கக் கூடாது என்று கூறி அ.தி.மு.க. தொண்டர்கள் சிலர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. 

அ.தி.மு.க

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, அ.தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. கோவையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் முன்பு உண்ணாரவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதற்காக, கோவை மாவட்டம் முழுவதுமிருந்து, தனியார் வாகனங்கள் ஏற்பாடு செய்து மக்கள் அதிக அளவில் அழைத்து வரப்பட்டிருந்தனர். அதிக மக்கள் கூடியதால், அவர்களை கட்டுப்படுத்த அ.தி.மு.க-வினரால் முடியவில்லை. எப்போது 12 மணி ஆகும் என்றே பலர் காத்திருந்தனர். சுமார் 1 மணியளவில், உண்ணாவிரதத்துக்கு வந்த பெரும்பாலான ஆண்கள், அருகிலிருந்த டாஸ்மாக் மதுபானக் கடை மற்றும் ஹோட்டல்களுக்குப் படையெடுத்தனர்.

அ.தி.மு.க

இதனால், டாஸ்மாக் கடையில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாகவே இருந்தது. இதையடுத்து, காந்திபுரம் மத்தியப் பேருந்து நிலையத்துக்குப் பின்னால் இருக்கும் டாஸ்மாக் பாருக்கு, இதுதொடர்பாக செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் சென்றனர். அப்போது, அவர்களைக் கண்ட அ.தி.மு.க- வினர், தங்களைப் புகைப்படமோ, வீடியோவோ எடுக்கக் கூடாது என்று கூறி இந்தியா டுடே செய்தியாளரின் செல்போனை பிடுங்கி தூக்கி வீசியுள்ளனர். மேலும், ஜெயா டி.வி ஒளிப்பதிவாளரையும் அவர்கள் தாக்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து அங்கு கூட்டம் கூடவே, தாக்குதலில் ஈடுபட்ட அ.தி.மு.க-வினர் சம்பவ இடத்திலிருந்து தப்பினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!