வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (03/04/2018)

கடைசி தொடர்பு:08:39 (04/04/2018)

பழங்குடியினர் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முதுமலையில் காகித மறுசுழற்சி மையம்!

நீலகிரி மாவட்டம் முதுமலையில் காகித மறுசுழற்சி மையத்தை வனத்துறைச் செயலாளர் முகமது நிசாமுதீன் திறந்து வைத்தார்.

முதுமலையில் அப்பகுதி பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் காகித மறுசுழற்சி மையம் திறக்கப்பட்டது.

காகித மறுசுழற்சி மையம்

முதுமலை கார்குடி வனச்சரகத்துக்கு உட்பட்ட காஞ்சிக்கொல்லி பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் சூழல் மேம்பாட்டுக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சூழல் மேம்பாட்டுக்குழு மூலம் அப்பகுதியில் காகித மறுசுழற்சி மையம் மூலம் பைகள், உறைகள் உற்பத்தி மேற்கொள்ளப்பட இருக்கின்றன. காகித மறுசுழற்சி மையத்தை வனத்துறைச் செயலாளர் முகமது நிசாமுதீன் இன்று திறந்து வைத்தார். இந்த மையம் காஞ்சிக்கொல்லி சூழல் மேம்பாட்டுக் குழு, முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் சோலா டிரஸ்ட் மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சோலா டிரஸ்ட்டின் மேலாண்மை அறங்காவலர் சுபாஷ் கௌதம் கூறுகையில், “வனத்துறையினரால் வனப்பகுதியிலிருந்து காகிதக் கழிவுகள் சேமிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாது, கேன்டீன் மற்றும் சுற்றுச்சூழல் கடை ஆகியவற்றிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவு காகிதக் கழிவுகள் சேமிக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் சேமிக்கப்படும் காகிதக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தலாம். சேமிக்கப்படும் காகிதக் கழிவுகளைப் பைகள், உறைகளாக மறுசுழற்சி செய்ய முதற்கட்டமாகத் திட்டமிடப்பட்டுள்ளது. வரும் காலங்களில் மேலும் அதிக மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் 10 கிலோ வரை காகிதக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படும்.

மறு சுழற்சி செய்து தயாரிக்கப்படும் பொருள்கள் முதுமலை, தெப்பக்காட்டில் உள்ள சூழல் மேம்பாட்டு குழுவின் கடை மூலம் விற்பனை செய்யப்படும். மேலும், இதேபோன்ற காகித மறுசுழற்சி மையங்களை மசினகுடி மற்றும் மாயார் போன்ற பகுதிகளில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றார். இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக இயக்குநர் சீனிவாசரெட்டி கூறுகையில், “மறுசுழற்சி மையம் மூலம் பழங்குடியினர் வேலைவாய்ப்பு பெறுவர். அதேபோல புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பகுதி குப்பைகளற்றதாக மாறும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க