சூப்பர் ஸ்டார் முதல் கியூப் சினிமா வரை... - வங்கிக் கணக்கை வருமான வரித்துறை முடக்கியது சரியா?! | IT freezes accounts of top people in cinema industry.

வெளியிடப்பட்ட நேரம்: 19:55 (03/04/2018)

கடைசி தொடர்பு:21:40 (03/04/2018)

சூப்பர் ஸ்டார் முதல் கியூப் சினிமா வரை... - வங்கிக் கணக்கை வருமான வரித்துறை முடக்கியது சரியா?!

சூப்பர் ஸ்டார் முதல் கியூப் சினிமா வரை...  - வங்கிக் கணக்கை வருமான வரித்துறை முடக்கியது சரியா?!

வருமான வரித்துறை 2017-18-ம் ஆண்டுக்கு வருமான வரி வசூல் இலக்கை அடைவதற்காக, முன்கூட்டியே செலுத்த வேண்டிய வரியில் (Advance Tax) பாக்கி உள்ளது என பல தொழில் நிறுவனங்கள் மற்றும் சுய சம்பாத்தியம் உள்ள தனி நபர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி வரி வசூலை அதிகப்படுத்தியுள்ளது. 2017-18 ஆம் ஆண்டிற்கான வருமான வரி குறையும் வாய்ப்பு உள்ளவர்களுக்கும் இந்த நோட்டீஸ் சென்றுள்ளது. அதிலும் முக்கியமாக பல சினிமா புள்ளிகளை இந்த திடீர் நடவடிக்கை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டதாக படபடக்கிறது தகவல். 

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் வருமான வரி கணக்கு வழக்குகளை நிறைவு செய்யும் பணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபடுவது வழக்கம். இதற்காக, கடந்த இரண்டு மாதமாக ஆயக்கர் பவனில் ஆய்வுப் பணியை மேற்கொண்டு வந்தனர் அதிகாரிகள். கணினியில் பதிவேற்றப்பட்ட முந்தைய ஆண்டு தகவல்களின் அடிப்படையில், வருமானத்தில் ஏதேனும் மாறுதல் ஏற்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு வருமான வரித்துறை தலைமை அலுவலகத்திலிருந்து இமெயில் சென்றுவிடும். அப்படித்தான் கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி இமெயில் அனுப்பியிருக்கிறார் வருமான வரித்துறையின் முதன்மை ஆணையர் சுனில்குமார். இந்த இமெயிலை சினிமா புள்ளிகளில் பலர் அலட்சியம் செய்துவிட்டனர். இதன் விளைவாக, பலரது வங்கிக் கணக்கை முடக்கும், வரிக்கு நிகரான சொத்துக்களை  முடக்கும் நடவடிக்கையில் இறங்கிவிட்டது ஐ.டி. இந்த அதிரடி வசூல் மேளாவை சினிமா புள்ளிகளில் பலர் எதிர்பார்க்கவில்லை. இதனையடுத்து, நிவாரணம் தேடி நீதிமன்றம் சென்றுள்ளனர் சிலர். 


    வருமான வரித்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். "வருமான வரிக் கணக்கை முறையாகத் தெரிவிக்காத சுமார் 25 ஆயிரம் பேருக்கு இந்த இமெயில் சென்றுள்ளது. வருமான வரித்துறையில் மொத்தம் 60 பிரிவுகள் உள்ளன. இதில், சினிமா நட்சத்திரங்களுக்காக 'மீடியா' என்ற பெயரில் தனிப்பிரிவு ஒன்று செயல்படுகிறது. கணக்கை முறையாக தாக்கல் செய்யாத வி.ஐ.பிக்கள் யார் எனத் தனியாகப் பட்டியல் ஒன்றை எடுத்துள்ளனர். அதன்படி, அவர்களுக்கு இமெயில் அனுப்பப்பட்டது. இந்த மெயிலை பார்த்துவிட்டு, 'நான் 90 லட்சம் கட்ட வேண்டும் என மெயில் அனுப்பியிருக்கிறீர்கள். கணக்குப்படி 25 லட்சம்தான் கட்டுவேன்' என வி.ஐ.பி ஒருவர் பேசினார். இதேபோல் ஒவ்வொரு பிரபலமும் அதிகாரிகளை அணுகியுள்ளனர். இதனையடுத்து, அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட முதன்மை ஆணையர் சுனில்குமார், 'எவ்வளவு கட்ட வேண்டுமோ அந்தப் பணம் வரும் வசூலாகும் வரையில், அதற்கு நிகரான தொகையை அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து கோரவோ, சொத்துக்களை முடக்கவோ செய்யுங்கள். எந்தவித சமரசமும் தேவையில்லை. நம்முடைய இலக்கை அடைய வேண்டும்' என ஸ்டாண்டிங் ஆர்டர் பிறப்பித்துவிட்டார்.
 

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். அவர்களில் ஒருவரான நடிகர் அர்விந்த் சாமி, இன்று உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். நீதியரசர் சிவஞானம் அமர்வு முன்பு வந்த இந்த வழக்கில், 'அர்விந்த் சாமியின் சொத்துக்களை விடுவியுங்கள். கணக்கை முறையாக அவர் தாக்கல் செய்துவிட்டார்' என உத்தரவிட்டுள்ளார். இதுபோக ரஜினி, விஷால், 'ஜெயம்' ரவி உள்ளிட்ட பலரும் க்யூப் சினிமாஸ் போன்ற நிறுவனங்களும்  அந்தப் பட்டியலில் அடக்கம். ஒவ்வொருவரும் நீதிமன்றம் மூலமாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் மூலமாகவும் தீர்வு தேடி வருகின்றனர். அரசுக்குச் சேர வேண்டிய வருமான இலக்கை அடைவதில் அதிகாரிகள் உறுதியாக உள்ளனர். இப்படியொரு கெடுபிடியை திரையுலகப் பிரமுகர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை!" என்றார் சுருக்கமாக.

இதில் ஒரு அதிர்ச்சி பின்னணி என்னவென்றால், வருமான வரி பாக்கி வைத்திருப்பவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பாக்கித் தொகையைப் பிடித்தம் செய்ய வங்கிகளை நிர்பந்தித்ததாம் வருமான வரித்துறை. நோட்டீஸ் அனுப்பி, அதற்கு தக்க விளக்கம் அளித்தவர்களுடைய வங்கிக் கணக்கிலிருந்தும் வருமான வரிபாக்கி என வங்கியை பிடித்தம் செய்து வருமான வரித்துறைக்கு செலுத்துமாறு  உத்தரவிட்டுள்ளதாம். ஒரு நிதி ஆண்டு முடிந்த பிறகு வருமான  வரி எவ்வளவு என கணக்கிட்டு முன்கூட்டியே செலுத்திய வரியை கழித்துக்கொண்டு மீதியை செலுத்தும் முறை இருக்கும்போது, அந்த நிதி ஆண்டு முடியும் முன்பே வருமான வரித்துறை கடந்த வருடங்களின் அடிப்படையில் வரியை தீர்மானிப்பது சரியல்ல என ஆடிட்டர்கள் கூறுகிறார்கள். 

மேலும் விளக்கம் அளித்தவர்களுக்கும் அந்த விளக்கத்தைப் பொருட்படுத்தாமல் அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக பணத்தை எடுத்துக் கொள்ள  உத்தரவிடப்பட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ’ஏன் இவ்வளவு தீவிரமான வசூல்..?’ என விசாரித்தால், ‘2016ல் நடைமுறைப்படுத்தப்பட்ட பணமதிப்பு நீக்கத்தினால் வரி வருமானத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை’ என்பதை நிலைநாட்டுவதற்காகவே இதுபோன்ற நடவடிக்கைகளில் வருமான வரித் துறை இறங்கியுள்ளதாக தொழில் துறை வட்டாரங்களில் முணுமுணுக்கிறார்கள்.
 
அதே சமயம் ரஜினி, விஷால் ஆகியோரின் அரசியல் ஆசைக்கு செக் வைக்கும் ஒரு முயற்சியாகவும் இது இருக்கிறது என்று இன்னொரு கோணத்திலும் விவாதம் நடக்கிறது!


டிரெண்டிங் @ விகடன்