`வேதாந்தா ஆலையின் வேலையாளாகச் செயல்படும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்!’ - கொதிக்கும் தி.மு.க | DMK condemns Thoothukudi district administration over supporting Sterlite Factory

வெளியிடப்பட்ட நேரம்: 20:27 (03/04/2018)

கடைசி தொடர்பு:08:37 (04/04/2018)

`வேதாந்தா ஆலையின் வேலையாளாகச் செயல்படும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்!’ - கொதிக்கும் தி.மு.க

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகச் செயல்படுவதை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என தி.மு.க-வின் மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் ஜோயல் எச்சரித்துள்ளார். 

ஸ்டெர்லைட் ஆலை

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ``தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சுத் தொழிற்சாலையால் மாவட்டத்தில் நிலம், நீர், காற்று என அனைத்தும் நஞ்சாக மாறிப்போய் விட்டது. மருத்துவத் துறையின் புள்ளிவிவர ஆய்வுகளின் அடிப்படையில் மாவட்டத்தில் தினமும் ஒருவர் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்து வரும் அபாய நிலையும் முடிவில்லாமல் தொடர்கிறது.

இத்தகைய சூழ்நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனம் புதியதாக தனது தொழிற்சாலையை விரிவாக்கம் செய்திடுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. இதனால் கொதித்துப்போன தூத்துக்குடி மாவட்ட மக்கள், மாணவர்கள், வணிகர்கள் என அனைத்துத் தரப்பினரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாமாகவே முன்வந்து தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்டெர்லைட் நச்சுத்தொழிற்சாலைக்கு மிக அருகிலுள்ள குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி கிராம மக்கள் தங்களது ஊர்களிலேயே ஒன்று கூடி கடந்த சில வாரங்களாக ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

தி.மு.க. மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் ஜோயல்கடந்த மாதம் 24-ம் தேதி தூத்துக்குடி மாநகரில் வியாபாரிகள் அனைத்துக் கடைகளையும் 24 மணிநேரமும் அடைத்து பொதுமக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். கடைகளை அடைத்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த ஒரே காரணத்துக்காக மாவட்ட ஆட்சியர் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகளைத் தூண்டிவிட்டு வணிகர்களை அச்சுறுத்தும் நோக்கத்தில் கடைகளில் திடீரென்று தேவையில்லாமல் சோதனைகளை மேற்கொண்டு வருகிறார்.
``பாலிதீன் பைகள்'' பயன்படுத்துவதாகக் கூறி, கடைகளில் ``பாலிதீன் பை'' இருந்தாலும் இல்லாவிட்டாலும் பொத்தாம்பொதுவாக ஒரு குறிப்பிட்ட தொகையை ஸ்பாட் பைனாக விதித்து வசூலித்து வருவதை தி.மு.க. இளைஞர் அணி வன்மையாகக் கண்டிக்கிறது. வியாபாரிகளை மிரட்டும் நோக்கத்தில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கைக்கூலியாகச் செயல்பட்டுவரும் போக்கினை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

குடிநீர் குடிப்பதற்கு முடியாமல் விஷமாகிவிட்ட நிலையில் குமரெட்டியாபுரம் கிராம மக்கள் ஸ்டெர்லைட் நச்சுத்தொழிற்சாலையை நிரந்தரமாக மூடவலியுறுத்தி கடந்த ஒரு மாதகாலத்துக்கும் மேலாக தொடர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். தங்களது குழந்தைகள், குடும்பத்தினருடன் கடும் வெயிலில் அமர்ந்து அறவழியில் போராட்டம் மேற்கொண்டுவரும் கிராமமக்களுக்கு பந்தல் அமைக்கவும், அவர்களை பிறபகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் சந்தித்துப் பேசவும் தடைபோட்டு, ஊருக்குள் நுழைய விடாமல் விரட்டி வரும் மாவட்ட காவல்துறை தனது போக்கை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்டத்தில்  பஸ் நிலையம், ரயில் நிலையம், விமானநிலையம், அரசு மருத்துவமனை மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் நிறுவனத்தின் விளம்பரப் பலகைகளை உடனடியாக அகற்றிட வேண்டும். இல்லாவிட்டால் இதனை பொதுமக்களுடன் இணைந்து தி.மு.க. இளைஞர் அணியினரான நாங்களே அதிரடியாக அகற்றிடுவோம். ``மாநகர மேம்பாடு வளர்ச்சி'' என்ற பெயரில் ஸ்டெர்லைட் நச்சுத் தொழிற்சாலையிடமிருந்து இனிமேல் நிதி பெற்று வளர்ச்சிப் பணிகளைச் செய்யும் முடிவினையும் மாவட்ட நிர்வாகம் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் ஸ்டெர்லைட் நச்சு ஆலையிடம் கையேந்தும் மாவட்ட ஆட்சியரைக் கண்டிக்கும் வகையில் அவரது இல்லத்தை அதிரடியாக முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திடுவோம்.

``நெஞ்சு பொறுக்குதில்லையே'' என்ற ரீதியில் பொங்கி எழுந்த மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடனும் மற்றும் மாணவர்கள், வணிகர்கள், சமூகஆர்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தினம்தோறும் ஸ்டெர்லைட் நச்சுத்தொழிற்சாலைக்கு எதிராகப் போராடி வரும் சூழலில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், இதனையெல்லாம் கண்டுகொள்ளாமல் வேதாந்தா ஆலையின் வேலையாளான ``கைப்பாவை'' போன்று, அந்நிறுவனத்துக்கு சாதகமாகவே செயல்பட்டு வருவது வெட்கக்கேடான செயலாகும்.
ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து 20 எம்.ஜி.டி குடிநீர் திட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் தண்ணீரை ஸ்டெர்லைட் நச்சுத் தொழிற்சாலைக்கு வழங்கக்கூடாது என்று பசுமைத் தீர்ப்பாயம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவினைச் செயல்படுத்தவேண்டிய மாவட்ட ஆட்சியர் இதனை காற்றில் பறக்கவிட்டுவிட்டு தினமும் 3 கோடி லிட்டர் தண்ணீரை ஸ்டெர்லைட் நச்சுத் தொழிற்சாலைக்குத் தாரைவார்த்து வருவது சட்டவிதிமுறைகளை மீறுகின்ற செயலாகும். 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாவட்டம் முழுவதும் மக்கள் எழுச்சியுடன் போராடி வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் அந்த ஆலையை நிறுத்தி வைத்துவிட்டு ஆய்வு நடத்தி வருவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. இப்படித்தான் கடந்த முறை நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் ஸ்டெர்லைட் நச்சுத் தொழிற்சாலையில் ஆய்வுக்கு வந்த ஆய்வுக்குழுவையும் மாவட்ட நிர்வாகம் ஏமாற்றியது. இப்போதும் அதுபோலத்தான் பெயரளவிற்கு ஒரு ஆய்வுக் குழுவினை அமைத்து மாவட்டத்திலுள்ள மக்களை ஏமாற்றி வருகிறது. தற்போதையச் சூழலில் ஸ்டெர்லைட் நச்சுத்தொழிற்சாலைக்கு எதிராக ஜாதி, மதம், அரசியலுக்கு அப்பாற்பட்டு தாமாக முன்வந்து தனிப்பட்ட முறையில் ஒற்றிணைந்து போராடி வரும் மக்களை யாராலும் விலை கொடுத்து வாங்கமுடியாது. 

எனவே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், இனியாவது தனது போக்கை மாற்றிக்கொண்டு மாவட்டத்திலுள்ள மக்களின் நலனைப் பாதுகாத்திட ஸ்டெர்லைட் நச்சுத் தொழிற்சாலையை மூடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும். இல்லையென்றால் வேதாந்தா ஆலையின் வேலையாளாகச் செயல்பட்டுவரும் மாவட்ட ஆட்சியரை, ஸ்டெர்லைட் நச்சுத் தொழிற்சாலையோடு சேர்த்து மாவட்டத்தை விட்டே வெளியேற்றுவோம் என்று உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.