`உங்க ஆட்சியில் தொடங்கிய ஆலையை நீங்களே மூடிவிடுங்கள்’ - கடுகடுத்த கீதா ஜீவன் எம்.எல்.ஏ.

``அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.க., ஆகிய இரண்டு கட்சிகள் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளுமே ஸ்டெர்லைட் போராட்டக் குழு மக்களுக்கு ஆதரவுதான். அ.தி.மு.க., ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்த ஆலையை இதே அ.தி.மு.க., ஆட்சியிலேயே மூடிவிடுங்கள்" என எம்.எல்.ஏ. கீதாஜீவன் பேசினார். 

கீதா ஜீவன் எம்.எல்.ஏ.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடி வரும் குமரெட்டியாபுரம் கிராம மக்களை தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏ., கீதாஜீவன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின் மக்களிடம் பேசுகையில், ``ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நீங்கள், போராட்டத்தை நடத்த ஆரம்பித்ததும் நான்தான் முதலில் உங்களை வந்து சந்தித்தேன். அரசியல்வாதிகள் யாரும் வரக் கூடாது என நீங்கள் சொன்னதால்தான் அதன்பிறகு வரவில்லை. இப்போது நீங்கள் என்னை அழைத்ததால் மீண்டும் உங்களைச் சந்திக்க வந்துள்ளேன். உங்கள் போராட்டத்துக்கு  தி.மு.க., தார்மீக ஆதரவை எப்போதும் தரும். தி.மு.க., மட்டுமல்ல, அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகளைத் தவிர மற்ற எல்லாக் கட்சிகளும் உங்களுக்கு ஆதரவுதான்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடிட அரசு நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தி, தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டுள்ளார். பொதுக் குழுவிலும் இதுதொடர்பாக தீர்மானம்  நிறைவேற்றப்பட்டுள்ளது. வரும்  சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இந்தப் பிரச்னையைப் பற்றி பேசுகிறேன்" என்றார். ``இந்த மாசுபட்ட தண்ணீரைத்தான்மா நாங்க குடிக்கிறோம்" எனப் பெண்கள் கீதா ஜீவனிடம் கூற, அந்தத் தண்ணீரில் சிறிதளவு குடித்துவிட்டு, ``கலங்கலாக உள்ளது" என்றார். 

Geetha jeevan drinks water

பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலுயுறுத்தி தி.மு.க சார்பில் நாளை (4.3.18) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறோம். அரசியல்வாதிகள் யாரும் போராட்டக் களத்திற்கு வரக் கூடாது என மக்கள் சொன்னதாக வதந்திகள் பரவின. அ.தி.மு.க.வுக்கு எதிராக மற்ற கட்சிகள் ஒன்று சேரக் கூடாது என அ.தி.மு.க. பரப்பிய வதந்திதான் அது. இந்த ஆலைக்கு அனுமதி கொடுத்து அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்ததே ஜெயலலிதாதான்.

நடப்பது அம்மா ஆட்சிதான் எனச் சொல்பவர்கள், இதே அ.தி.மு.க. ஆட்சியிலேயே இந்த ஆலையை மூடி விடட்டும். ஆட்சி  அதிகாரத்தையும் மத்திய அரசைக் கேள்வி கேட்கும் உரிமையையும் கையில் வைத்துக் கொண்டு, இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மோடி ஆட்சியை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி கேள்வி கேட்க முடியாத நிலையையே இது காட்டுகிறது. பக்கத்து தொகுதியான தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏ., நான் இப்போராட்டம் தொடங்கும் போதும் முதல் ஆளாக வந்து ஆதரவு அளித்தேன். தற்பொழுதும் வந்துள்ளேன். இந்தப் பகுதியிலுள்ள ஒட்டப்பிடாரம் தொகுதியின் எம்.எல்.ஏ. சுந்தரராஜன் எங்கே போனார் எனத் தெரியவில்லை" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!