`மத்திய அரசு இதைச் செய்தால் தண்ணீர் பிரச்னை தீரும்!’ - அமைச்சர் கருப்பண்ணனின் யோசனை

``இந்தியாவிலுள்ள அனைத்து நதிகளையும், அணைகளையும் மத்திய அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் தமிழகத்தின் தண்ணீர் பிரச்னை தீரும்” எனச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் பேசியுள்ளார்.

அமைச்சர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அ.தி.முக சார்பில் ஈரோட்டில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரதத்தை முடிக்கும் முன்னதாகப் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர், ``காவிரி விவகாரத்தில் கால் நூற்றாண்டு காலமாக பல போராட்டங்களை நடத்தி, உண்ணாவிரதமிருந்து நல்ல தீர்ப்பினை பெற்றுத் தந்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. அந்த வகையில், அம்மாவின் மறு உருவமாக ஈ.பி.எஸ், காவிரி பிரச்னையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு கொடுத்தும், மத்திய அரசு அதனை அமல்படுத்த மறுக்கிறது. கர்நாடகாவின் உபரி நீரையாவது பெற்றுத்தர மத்திய அரசு முன்வர வேண்டும். மேலும், இந்தியாவிலுள்ள அனைத்து நதிகள் மற்றும் அணைகளையும் மத்திய அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டினுடைய தண்ணீர்ப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்.

அன்றைக்குக் காவிரி ஒப்பந்தத்தை ஆட்சியில் இருந்த தி.மு.க புதிப்பித்திருந்தால் இன்றைக்கு இந்தப் பிரச்னையே வந்திருக்காது. அன்றைய சூழலில் கருணாநிதி மானாட மயிலாட நிகழ்ச்சியைப் பார்த்து ரசித்து, அதில் மூழ்கியிருந்ததால்தான் இன்றைக்கு நாம் சிரமப்படுகிறோம். அம்மா அரசைக் கலைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இன்றைக்கு தி.மு.க-வினர் போராட்டம் நடத்துகிறார்கள். ஸ்டாலினுக்கு முதலமைச்சராகும் ராசி இல்லை. அவரால் முதலமைச்சர் ஆக முடியாது. இதுக்கு இடையில் அவரோட மகன் உதயநிதி வேற அரசியலுக்கு வர்றாராம். அவர் அரசியலுக்கு வந்து என்ன பண்ணப் போறார். ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் இந்த ஆட்சியை அசைக்க முடியாது. இன்னும் 100 ஆண்டுகளுக்கு அ.தி.மு.க தான் ஆட்சியில் இருக்கும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!