`போராட்டத்துக்கு அழைத்து தாக்குவதுதான் தி.மு.க-வின் நியாயமா?’ கொதிக்கும் வடசென்னை காங்கிரஸார் | Clash between DMK and Congress cadres in chennai protest

வெளியிடப்பட்ட நேரம்: 21:52 (03/04/2018)

கடைசி தொடர்பு:08:13 (04/04/2018)

`போராட்டத்துக்கு அழைத்து தாக்குவதுதான் தி.மு.க-வின் நியாயமா?’ கொதிக்கும் வடசென்னை காங்கிரஸார்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஓட்டேரியில் தி.மு.க. தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின்போது அக்கட்சியினர், தோழமைக் கட்சியான காங்கிரஸ் நிர்வாகிகளைத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்றுள்ளது. 

தி.மு.க. - காங்கிரஸ்


சேகர் பாபு எம்.எல்.ஏ.தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேகர் பாபு எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் ஓட்டேரி மேம்பாலம் அருகில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மாவட்டத் தலைவர்  எம்.எஸ்.திரவியம் ஏற்பாட்டின் பேரில், சர்க்கிள் தலைவர் என்.எஸ்.பாஸ்கர், நிலவன், ரவிக்குமார், ரஞ்சித் குமார், ஜி.தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் அந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றனர். அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்துள்ளார். அவரிடம் என்.எஸ். பாஸ்கர் தலைமையிலான காங்கிரஸார், `மாவட்டத் தலைமைக்குத் தகவல் சொல்லாமல் நீங்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள வரலாமா?’ என்று கேள்வி எழுப்பினர். இதனால், பீட்டர் அல்போன்ஸ் மற்றும் பாஸ்கர் தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தை அடுத்து பீட்டர் அல்போன்ஸ், சாலை மறியல் போராட்டத்துக்கு நேரடியாகச் சென்றுவிட்டார். அவரை சேகர் பாபு வரவேற்று போராட்டம் நடைபெறும் இடத்துக்கு அழைத்துச் சென்றார். 

இதையடுத்து காங்கிரஸ் தொண்டர்களும் சாலைமறியலில் கலந்துகொண்டனர். இந்நிலையில், பாஸ்கர் தலைமையிலான காங்கிரஸார் ஒதுங்கியிருந்தனர். அப்போது, பாஸ்கர் தலைமையிலான காங்கிரஸார், பீட்டர் அல்போன்ஸை வழிமறித்துத் தகராறு செய்வதற்கு ஒதுங்கியிருப்பதாகத் தகவல் பரவியது. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட தி.மு.க. தொண்டர்கள் சிலர், ஓடிவந்து என்.எஸ்.பாஸ்கர் தலைமையிலான காங்கிஸாரை விரட்டி அடித்தனர். அதில், என்.எஸ்.பாஸ்கர் முகத்தில் கடுமையாகத் தாக்கப்பட்டார். மேலும், அவருடன் வந்த பெருமாள், உதயக்குமார் உள்பட சிலருக்கு தர்ம அடி விழுந்தது. இதில், பெருமாளுக்குத் தாடை கிழிந்து ரத்தம் வழிந்தது. இதுதொடர்பாக என்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட காங்கிரஸார், திரு.வி.க. நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரில், `தி.மு.க. மாவட்டச் செயலாளர் சேகர் பாபு உள்பட 200 பேர் எங்களைத் தாக்கி காயம் ஏற்படுத்தினர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்தத் தகராறு குறித்து திருநாவுக்கரசருக்கு மாவட்டத் தலைவர் எம்.எஸ்.திரவியம் எம்.எஸ். திரவியம்போனிலேயே தகவல் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து விசாரிப்பதாக அவர் உறுதியளித்தார். தாக்குதலுக்குள்ளான காங்கிரஸார் தரப்பிலிருந்து தி.மு.க. தலைமைக்கு புகார் போயிருக்கிறது. இதுகுறித்து விசாரிப்பதாக தி.மு.க. தலைமை அவர்களிடம் உறுதியளித்துள்ளதாகத் தெரிகிறது. 

இந்தச் சம்பவம் குறித்து வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.எஸ். திரவியம் கூறுகையில், `தி.மு.க. மாவட்டச் செயலாளர்களான சேகர் பாபு, மாதவரம் சுதர்சனம் ஆகியோரின் எல்கைக்குட்பட்ட இடங்களில் நடைபெறும் போராட்டத்துக்குத் தோழமைக் கட்சியின் மாவட்டத் தலைவர் என்கிற முறையில் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மாதவரம் சுதர்சனம் தலைமையில் கொருக்குப்பேட்டையில் நடந்த ரயில் மறியல் போராட்டத்துக்கு நான் சென்று விட்டேன். அதனால் சேகர் பாபு தலைமையிலான போராட்டத்துக்கு என்.எஸ்.பாஸ்கர் தலைமையில் நிர்வாகிகளை அனுப்பி வைத்தேன். சோனியா மற்றும் ராகுல் படங்கள் மற்றும் காங்கிரஸ் கொடியுடன் அவர்கள் போராட்டத்துக்குச் சென்றுள்ளனர். இது தி.மு.கவினருக்கு உறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என நினைக்கிறேன். அதோடு எங்களது முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸும் சம்பவ இடத்துக்கு வந்துள்ளார். அப்போது எங்கள் நிர்வாகிகள் பீட்டர் அல்போன்ஸிடம், `இதுதொடர்பாக மாவட்டத் தலைமையிடம் தகவல் தெரிவித்திருந்தால், சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருப்போமே. உங்களை வரவேற்க மாவட்டத் தலைவரும் வந்திருப்பாரே’என்று கூறினர். இது எங்கள் உட்கட்சிப் பிரச்னை. இது எங்கள் குடும்பப் பிரச்னை. நாங்கள் இதைப் பேசித் தீர்த்துக் கொள்வோம். ஆனால், இதைத் தவறாகப் புரிந்துகொண்டு தி.மு.கவினர் தோழமைக் கட்சியான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளைத் தாக்குவது நியாயமா?. போராட்டத்துக்கு அழைத்துவிட்டு தாக்குவதுதான் தி.மு.க-வினரின் நியாயமா?’’ என்றார் ஆதங்கத்துடன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close