வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (04/04/2018)

கடைசி தொடர்பு:10:55 (04/04/2018)

உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேச அரசுகளைக் கலைக்க வேண்டும்..! திருமாவளவன் கோரிக்கை

வன்கொடுமை தடுப்புச் சட்டம் சம்பந்தமாக  உச்ச நீதிமன்ற அளித்த தீர்ப்புக்கு எதிராக

வன்கொடுமை தடுப்புச் சட்டம் சம்பந்தமாக உச்ச நீதிமன்ற அளித்த தீர்ப்புக்கு எதிராக வடமாநிலங்களில் போராட்டம் நடத்திய பட்டியலின மக்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி கொல்லப்பட்டதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. 

வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், 'வன்கொடுமை தடுப்புச் சட்டம் பற்றி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்புக்கு எதிராகப் பல்வேறு மாநிலங்களில் பட்டியலின மக்கள் கிளர்ந்தெழுந்து போராடி வருகின்றனர். ஏப்ரல் 2-ம் தேதி நடைபெற்ற முழுஅடைப்பு போராட்டத்தின்போது போலீஸாரின் தாக்குதல்களுக்கும் துப்பாக்கிச் சூட்டுக்கும் 10 பேர் பலியாகியுள்ளனர். பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசத்தில்தான் துப்பாக்கிச்சூடு அதிகம் நடத்தப்பட்டிருக்கிறது.

உத்திரபிரதேசம்

சாதி வெறியோடு படுகொலையில் ஈடுபட்ட இரண்டு மாநில அரசுகளையும் கலைக்க வேண்டுமென குடியரசுத் தலைவரை வலியுறுத்துகிறோம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மோடி அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறது. அது ஒரு கண் துடைப்பு நாடகம். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை முடக்கும் விதத்தில் தீர்ப்பளித்த அதே நீதிபதிகளுக்கு முன்னாள் சீராய்வு மனு தாக்கல் செய்வது எந்த பலனையும் அளிக்காது. எனவே, உச்சநீதிமன்றத்தின் முழுமையான அமர்வுக்கு மேல்முறையீடு செய்ய வேண்டும். தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்குத் தடையாணை பெற வேண்டும் என பட்டியலின இயக்கங்கள் வலியுறுத்தின.

ஆனால், அவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு மத்திய அரசு, பட்டியலின மக்களின் போராட்டங்களைத் திசை திருப்பும் விதமாக சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. அதை விசாரித்த அதே நீதிபதிகள் தங்களது தீர்ப்புக்கு தடைவிதிக்க முடியாது என்று கூறிவிட்டார்கள். இது எல்லாமே பா.ஜ.க அரசும் நீதிபதிகளும் முன்கூட்டியே பேசி வைத்துக்கொண்டு செயல்படுகிறார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட தலித்துகளுக்கு எமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பாதுகாக்க அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துகிறோம்' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க